*ஆசிரியர்கள் இந்த அரசுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை புரிந்து கொண்டு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.*
_மாறாக அடக்குமுறைகளால் போராட்டங்களை அடக்கி விடலாம் என்று நினைத்தால் அனைத்து ஆசிரிய சங்கங்களும், போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.._
*- தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் அறிக்கை வெளியீடு !!*
தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்.
போராடும் ஆசிரியர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளையும், வழக்குகளையும் கைவிட வேண்டும், தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேசித் தீர்வு காண வேண்டும் எனத் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை. தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகப் பதிவு மூப்பு மற்றும் இடைநிலை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் 'சம வேலைக்குச் சம ஊதியம்' என்ற கோரிக்கைக்காகப் போராடி வருகின்றனர்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருந்தது.
இடைநிலை ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் இந்தக் கோரிக்கைக்காக ஏற்கனவே பலமுறை போராட்டம் நடத்தி உள்ளனர். ஒவ்வொரு முறையும் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பதும், சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்புவதுமாகவே இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகப் போராடி வரும் ஆசிரியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும், தரதரவென இழுத்துச் செல்லப்படுவதும், பேருந்துகளில் அலைக்கழிக்கப்படுவதும் ஊடகத்தின் மூலம் கவனத்திற்கு வருகிறது.
இது அனைத்துத் தரப்பு ஆசிரியர்களையும் கவலை கொள்ளச் செய்கிறது. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன கோரிக்கைக்கு நியாயம் கேட்டு, அந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஆசிரியர் சங்கம் போராடி வருவதை உரிய பேச்சு வார்த்தைகளின் மூலம் சரி செய்ய வேண்டுமே தவிர அடக்குமுறைகளால் அடக்க நினைப்பது சரியானது அல்ல.
அரசு ஊழியர்கள் அடக்குமுறைக்கு அஞ்சுபவர்களும் அல்லர்.
கடந்த காலத்தில் அவர்களே ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாக இருந்தவர்கள் என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.
போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் மீது எந்த அடக்கு முறையையும் ஏவாமல், அவர்களுக்கு உரிய பாதுகாப்புகளையும், வசதிகளையும் செய்து கொடுத்துப் பேச்சு வார்த்தைகளின் மூலம் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதுதான் இந்த அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தித் தரும்.
மேலும் ஆசிரியர்கள் இந்த அரசுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் புரிந்து கொண்டு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
மாறாக அடக்குமுறைகளால் போராட்டங்களை அடக்கி விடலாம் என்று நினைத்தால் அனைத்து ஆசிரிய சங்கங்களும் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் இதன் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
ஆமலைக்கொழுந்தன்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.