அரசுப்பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை - ஆசிரியர்கள் கொடுத்த மனஅழுத்தம் காரணம் என மரண வாக்குமூலம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 20, 2025

அரசுப்பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை - ஆசிரியர்கள் கொடுத்த மனஅழுத்தம் காரணம் என மரண வாக்குமூலம்



அரசுப்பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை - ஆசிரியர்கள் கொடுத்த மனஅழுத்தம் காரணம் என மரண வாக்குமூலம்

கோவை வால்பாறையில் 9ம் வகுப்பு மாணவி சஞ்சனா, ஆசிரியைகளின் மன அழுத்தத்தால் தற்கொலை முயற்சி செய்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியைகள் அவமானப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை எஸ்டேட்டில் வசிப்பவா் சக்திவேல். இவரது மகள் முத்துசஞ்சனா (13). இவா் ரொட்டிக்கடை அரசு உயா்நிலைப் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த நவம்பா் 10- ஆம் தேதி காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதில், பலத்த தீக்காயம் அடைந்த முத்துசஞ்சனா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மரண வாக்கு மூலம்!

மாணவி சிகிச்சையில் இருந்தபோது விடியோ மூலம் வாக்குமூலம் அளித்திருந்தாா். அதில், நான் சரியாகப் படிக்கவில்லை எனக்கூறி அறிவியல் ஆசிரியா், தமிழ் ஆசிரியா், ஆங்கில ஆசிரியா் ஆகியோா் என் மீது தோ்வு எழுத பயன்படுத்தப்படும் அட்டையைத் தூக்கி வீசினா். கன்னத்தில் அறைந்து முட்டிபோட வைத்தனா். பெற்றோரிடம் புகாா் தெரிவிப்பதாக ஆசிரியா்கள் கூறினா்.

மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டால் பெற்றோா் கண்டிக்கமாட்டாா்கள் என நினைத்து இவ்வாறு செய்தேன். தீக்குளித்தால் இந்த அளவு காயம் ஏற்படும் எனத் தெரியாது என்று கூறியிருந்தாா். உடலை வாங்க மறுத்து போராட்டம்: முன்னதாக, மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் கோவை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ரேஸ்கோா்ஸ் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாணவியின் தற்கொலைக்கு காரணமான 3 ஆசிரியா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, மாணவியின் உடல் மாலை 4 மணியளவில் வால்பாறைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்: ஆசிரியா்கள் மூவா் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இது குறித்து போலீஸாா் கூறுகையில், மாணவி விவகாரத்தில் இயற்கைக்கு மாறான இறப்பு என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸாா் தரப்பிலும், கல்வித் துறை அதிகாரிகள் தரப்பிலும் பள்ளியில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களிடம் விசாரணை நடத்தப்படும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

முன்னதாக, மாவட்ட கல்வி அலுவலா் மணிமாலா, வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் ராமசந்திரன் ஆகியோா் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.