அரசு பள்ளி ஆசிரியைக்கு லண்டனில் கவுரவம் - ஏன்? என்ன செய்தார் இவர்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 12, 2025

அரசு பள்ளி ஆசிரியைக்கு லண்டனில் கவுரவம் - ஏன்? என்ன செய்தார் இவர்?



அரசு பள்ளி ஆசிரியைக்கு லண்டனில் கவுரவம் - ஏன்? என்ன செய்தார் இவர்?

தலைமை ஆசிரியை பொறுப்பை கைவிட்டு, இடைநிலை ஆசிரியராக பதவி இறங்கி, தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வரும், சென்னை, ஷெனாய் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கனகலட்சுமிக்கு விருது வழங்கி, பிரிட்டன் பார்லிமென்ட் கவுரவிக்க உள்ளது.

கோவில்பட்டியைச் சேர்ந்த கனகலட்சுமி, எம்.ஏ., தமிழ் மொழியியல், இலக்கியம் படித்துள்ளார். தமிழ் பல்கலையில் பி.லிட்., பட்டமும், கரந்தை தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டமும், அண்ணாமலை பல்கலையில் பி.எட்., பட்டமும் பெற்றுள்ளார்.

'தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்.டி., முடித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய இவர், தன் தமிழ் ஆர்வத்தால், சென்னை, ஷெனாய் நகர் மாநகராட்சி பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பதவி இறக்கம் பெற்று, பணியில் சேர்ந்தார்.

கடந்த 23 ஆண்டுகளாக தமிழில் எழுத, படிக்க தெரியாத மாணவர்களை தேர்வு செய்து, எளிய முறையில் கற்பித்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒலக்கூர் கிராமத்தில், ஆறு பள்ளிகளில் இருந்த, 100 மாணவர்களை தேர்வு செய்து, 40 நாள்களில், அவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க கற்பித்தார்.

தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில், படிக்கத் தெரியாத ஒரு லட்சத்து, 56,710 மாணவர்களை வாசிக்க வைத்து, மாவட்ட கலெக்டரின் பாராட்டை பெற்றார்.

கொரோனா காலத்தில், 36 குழந்தைகளுக்கு தமிழ் வாசிப்பு பயிற்சி அளித்ததுடன், 2,000 ஆசிரியர்களுக்கு எளிய முறை தமிழ் வாசிப்பை கற்பிப்பதற்கான பயிற்சிகளை அளித்தார். மேலும், 'கியூஆர் குறியீடை ஸ்கேன்' செய்தால், எளிய தமிழ் வாசிப்பு பயிற்சி பெறும் வகையில், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவரின் தமிழ்ப் பணிகளை, சமூக வலைதளங்கள் வாயிலாக கண்காணித்த, பிரிட்டனில் உள்ள கிராய்டான் தமிழ்ச் சங்கம், பிரிட்டன் பார்லிமென்டில் இவரை கவுரவிக்க உள்ளது. மேலும், ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நடக்க உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.

பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், 'தமிழால் உயர்ந்துள்ள ஆசிரியை கனகலட்சுமிக்கு, தமிழனாக மனமார்ந்த வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.