ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்பதாக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு Teachers' union announces participation in the Jackto Geo protest
ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக நூறு சதவீதம் ஆசிரியர்கள் கலந்துக் கொள்வார்கள் என பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி, மாநில தலைவர் தீனதயாள், மாநில பொருளாளர் ருக்மாங்கதன் ஆகியோரின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
திருச்சியில் கூடிய ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் 04.02.2025 அன்று எடுக்கப்பட்ட முடிவின் படி 10 அம்ச கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 14.02.25 வெள்ளிக்கிழமை வட்டார அளவிலான மாலை நேர ஆர்ப்பாட்டத்தை மிகுந்த எழுச்சியாக நடத்துவது, அதனை தொடர்ந்து வருகிற 25. 02. 2025 செவ்வாய்க்கிழமை மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், 01.04.2003 பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு,. உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு. உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப் பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண்.243 நாள்:21.12.2023ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டின் களைய வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
இது போன்ற 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அறிவித்து நடத்த உள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பங்குபெறுவார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின், இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேச வேண்டுமென தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.