பள்ளி நுழைவாயிலில் சாதி பெயரை எழுதலாமா? - உயர்நீதிமன்றம் சாராமரி கேள்வி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 16, 2025

பள்ளி நுழைவாயிலில் சாதி பெயரை எழுதலாமா? - உயர்நீதிமன்றம் சாராமரி கேள்வி



Can caste name be written at school entrance? - High Court issues order - பள்ளி நுழைவாயிலில் சாதி பெயரை எழுதலாமா? - உயர்நீதிமன்றம் சாராமரி கேள்வி

'பள்ளிகளின் நுழைவாயிலில் சாதி பெயர் இருப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன? சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்லிக் கொடுத்துவிட்டு, பள்ளி நுழைவாயிலில் சாதி பெயரை எழுதலாமா?' என்று ஐகோர்ட் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு இன்று சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், 'மனுவில் இந்த சங்கம், தங்களுடைய சாதி மேம்படுத்த வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது சாதி தான் முக்கியம்.

அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தான் சங்கத்தில் உறுப்பினராக முடியும் என்று கூறினால், இதுபோன்ற சாதி சங்கத்தை தமிழ்நாடு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா?. இந்த நாட்டில் அனைவருக்கும் சங்கத்தை உருவாக்க உரிமை உள்ளது. அதாவது குறிப்பிட்ட சாதிக்காக சங்கத்தை தொடங்கலாம். ஆனால், சாதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன், சாதியின் பெயரில் சங்கம் தொடங்க முடியுமா?. சங்கங்களின் சட்டத்தின் படி, அறிவியல் வளர்ச்சி சமுதாய தொண்டு செய்யும் நோக்கங்களுக்காக சங்கங்களை தொடங்கலாம். ஆனால், அரசியல் அமைப்புச் சட்டம் சாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. அசோக்குமார் தாக்கூர் வழக்கிலும் உச்சநீதிமன்றம் அதை தான் வலியுறுத்துகிறது.

எனவே, சங்கப் பதிவு சட்டங்களின்படி, சாதியின் பெயரில் சங்கங்கள் தொடங்க முடியுமா?. இதுபோன்ற சாதி சங்கங்கள் சார்பில் பள்ளி கல்லூரிகள் என கல்வி நிலையங்களும் இயங்குகின்றன. பள்ளிகளின் நுழைவாயிலில் சாதி பெயர் இருப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன? சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்லிக் கொடுத்துவிட்டு, பள்ளி நுழைவாயிலில் சாதி பெயரை எழுதலாமா?' என்று நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலை குறித்து பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.