ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் - இதுதான் காரணம்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 7, 2024

ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் - இதுதான் காரணம்!!



ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் - இதுதான் காரணம்!! Teacher Uma Maheshwari suspended - this is the reason!!

அரசுக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்த பட்டதாரி ஆசிரியர் உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உமா மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது முகநூல் பக்கத்தில், கல்வித்துறையில் நிகழும் குறைகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறை பற்றி தனது கட்டுரைகள் மூலம் பொதுசமூகத்திற்கு புரிதலை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து எழுதி வருகிறார். ஆசிரியர் சங்கங்கள் மூலம் அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பள்ளிக்கல்வி குறித்து தொடர்பாக முகநூல் பக்கத்தில் சில கட்டுரைகளை எழுதி இருந்தார். இது அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆசிரியர் உமா மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து செங்கல்பட்டு கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறி கருத்துகளை பதிவிட்டு வந்ததால், இந்த நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டுள்ளது.

“ஏழைக்குழந்தைகளின் கல்வி பாதிப்புகளையும், பொதுக்கல்வி முறையில் உள்ள சிக்கல்களையும் தீர்வுகளையும் குறித்து ஆசிரியர்கள் எழுதுவது குற்றசெயல் அல்ல. பொதுக்கல்விமுறையை பாதுகாக்கவும், சமகாலக்கல்வி முறையில் உள்ள குறைகளை சரிசெய்யவும் வலியுறுத்துவது ஆசிரியர்களின் ஜனநாயக கடமை.

மாற்றுக்கருத்து கூறுவோரை அடக்குமுறை கையாளும் தமிழக அரசின் எதேச்சதிகார போக்காகவும், கருத்துரிமையை நசுக்கும் விதமாகவும் இந்த தற்காலிக பணிநீக்கம் உத்தரவு இருப்பதால் உமாமகேஸ்வரியை தற்காலிக பணி நீக்கத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று அவருக்கு ஆதரவாக சமூகவலைதள பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.