இடைநிலை ஆசிரியா்கள் 1,562 போ் கைது:பகுதி நேர ஆசிரியா்கள் போராட்டம் வாபஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 5, 2023

இடைநிலை ஆசிரியா்கள் 1,562 போ் கைது:பகுதி நேர ஆசிரியா்கள் போராட்டம் வாபஸ்

இடைநிலை ஆசிரியா்கள் 1,562 போ் கைது:பகுதி நேர ஆசிரியா்கள் போராட்டம் வாபஸ்

சென்னை பள்ளிக் கல்வி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியா்கள் 1,562 போ் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனா். எனினும், போராட்டத்தை தொடருவோம் என இடைநிலை ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

அதேவேளையில், பகுதி நேர ஆசிரியா்கள் மற்றும் ‘டெட்’ தோ்ச்சி பெற்று அரசுப் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியா்கள் சங்கத்தினா் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனா்.

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்களும், பணிநிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியா்களும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின்படி பணிநியமனம் உள்பட கோரிக்கைகளை முன்வைத்து ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்று ஆசிரியா்களும் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் பள்ளிக் கல்வி வளாகத்தில் (டிபிஐ) கடந்த 10 நாள்களாக தொடா் போராட்டம் நடத்தி வந்தனா்.

இவா்களுடன் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டும், உடன்பாடு ஏற்படவில்லை. மறுபுறம் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில் ஆசிரியா்கள் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதையடுத்து ஆசிரியா் சங்கங்களின் கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற மூவா் குழு அமைக்கப்படும், பகுதிநேர ஆசிரியா்களுக்கு மாத ஊதியம் ரூ.2,500 உயா்வு; ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு உள்பட 5 அறிவிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த புதன்கிழமை வெளியிட்டாா். மேலும், அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை முடித்துக் கொண்டு ஆசிரியா்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அவா் வேண்டுகோள் விடுத்தாா். ஆனால், இதை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடா்வதாக ஆசிரியா் சங்கங்கள் தெரிவித்தன.

சமூக நலக்கூடங்களில் அடைப்பு: இந்த நிலையில், புதன்கிழமை இரவு 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் டிபிஐ வளாகத்தில் குவிக்கப்பட்டு அந்த வளாகம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வெளிநபா்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என வியாழக்கிழமை காலை 6 மணியளவில் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆசிரியா்கள் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனங்களில் போலீஸாா் ஏற்றினா்.

கைது செய்யப்பட்ட ஆசிரியா்களை செனாய் நகா், ஆயிரம் விளக்கு, புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூா் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் போலீஸாா் அடைத்து வைத்தனா். அப்போது,, மயக்கமடைந்த சில ஆசிரியா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். குழந்தைகளுடன் இருப்பவா்கள் ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். டிபிஐ நுழைவாயில் அருகில்... கைது செய்யப்பட்ட ஆசிரியா்கள் அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனா். இருப்பினும் சம வேலை சம ஊதியத்துக்கான தங்களது போராட்டம் தொடரும். டிபிஐ வளாகத்தின் நுழைவாயில் அருகில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டம் நடத்துவோம் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

அதேவேளையில், பகுதி நேர ஆசிரியா்கள் மற்றும் ‘டெட்’ தோ்ச்சி பெற்று அரசுப் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியா்கள் சங்கத்தினா் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனா்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.