முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘நான் முதல்வன்’ திட்ட முதலாண்டு வெற்றி விழா - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 7, 2023

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘நான் முதல்வன்’ திட்ட முதலாண்டு வெற்றி விழா

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘நான் முதல்வன்’ திட்ட முதலாண்டு வெற்றி விழா

சென்னையில் ‘நான் முதல்வன்’ திட்ட முதலாண்டு வெற்றி விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது

‘நான் முதல்வன்’ திட்டத்தின் முதலாண்டு வெற்றி விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

மாணவ, மாணவிகளின் தனி திறமைகளை அடையாளம் கண்டு, ஊக்குவிப்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம். ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பு, அறிவு, திறன், சிந்தனை, ஆற்றலில் மேம்படுத்துவது இத்திட்டத்தின் இலக்கு ஆகும். மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் அவர்களது துறை சார்ந்த மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் இத்திட்டம் மூலம் வழங்கப்படுகிறது.

தற்போதைய தொழில் துறையில் நிலவும் இடைவெளிகளின் அடிப்படையில், இளைஞர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கக்கூடிய வல்லுநர்களை கண்டறிவது, மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது, திறமைக்கேற்ப அவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதிசெய்வது ஆகியவையே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இத்திட்டத்தின்கீழ் பள்ளி, கல்லூரி மாணவர்கள், யுபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய, மாநில போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவோருக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில், நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவு சார்பில் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெற 1,000 பேருக்கு முதல்நிலை தேர்வுக்கு ரூ.7,500, முதன்மை தேர்வுக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்லூரி மாணவர்களுக்கு படிப்புகள், தொழில் சார்ந்த திறன் சலுகைகள் பற்றிய தகவல்களை https://naanmudhalvan.tn.gov.in இணையதளம் வழங்கி வருகிறது.

இதுவரை இத்திட்டத்தின்கீழ் 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சியும், 1.50 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்புக்கு பிறகு, மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு திட்டத்தில் 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க, உயர்வுக்குப் படி திட்டத்தின்கீழ் 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். நான் முதல்வன் இணையதளம் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022 ஆகஸ்டில் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், இத்திட்டத்தின் வெற்றி விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

Watch Video Join Telegram App

https://t.me/Kalviseithi2/14830

https://t.me/Kalviseithi2/14829

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.