பள்ளிக்கல்வி துறையில் சிறை தண்டனை பீதி! அதிகாரிகளை உஷார்படுத்தும் சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 5, 2023

பள்ளிக்கல்வி துறையில் சிறை தண்டனை பீதி! அதிகாரிகளை உஷார்படுத்தும் சுற்றறிக்கை



பள்ளிக்கல்வி துறையில் சிறை தண்டனை பீதி! அதிகாரிகளை உஷார்படுத்தும் சுற்றறிக்கை

சென்னை--'சிறை தண்டனையில் சிக்காமல், நீதிமன்ற உத்தரவுகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரின் பணி வரன்முறைக்கான உத்தரவை முழுமையாக பிறப்பிக்காதது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில், கடந்த, 2ம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால், பள்ளிக்கல்வியின் முன்னாள் முதன்மை செயலர் உள்பட மூன்று கல்வி அதிகாரிகளுக்கு, 2 வார சிறை தண்டனையுடன், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், பட்டதாரி வரலாறு ஆசிரியருக்கு, பணி நியமன ஒப்புதல் வழங்குவதற்கான, உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு வந்தது. இதிலும், நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நீதிமன்ற உத்தரவுகளால், பள்ளிக்கல்வி துறைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், 'பள்ளிக்கல்வி துறை தொடர்பான வழக்கு களில், நீதிமன்ற உத்தரவுகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.

'எதிர்காலத்தில் சிறை தண்டனை போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல், நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த, மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.