மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பாடுபடும் ஆசிரியர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 2, 2023

மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பாடுபடும் ஆசிரியர்கள்



பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பாடுபடும் ஆசிரியர்கள்

உதகை: பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும்நீலகிரி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடிஇடைநிற்றலால் கல்வியை தொடராமல் விட்டு விடுகின்றனர். அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வந்து, கல்வியை தொடர வழி வகை செய்து வருகின்றனர் ஆசிரியர்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள சோகத்தொரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக மிகவும் குறைவாக இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கிராம மக்களுடன் இணைந்து பல்வேறு தொண்டு நிறுவனத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி கூறுகையில், “ஆசிரியர்களின் முயற்சியால் பள்ளி பல்வேறு வகையில் முன்னேறி வருகிறது. தனியார் அமைப்பு மூலமாக உதவிகள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் சிமென்ட் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

முன்னாள் மாணவர் தீப்பு சிவயோகி 5 மடிக்கணினி வழங்கியுள்ளார். பள்ளியில் நடைபெற்ற காமராஜர் விழாவில், மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகள் பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. இதனால் தற்போது தனியார் பள்ளிக்கு இணையாக எங்கள் பள்ளி இயங்கி வருகிறது” என்றார். இதேபோல, பந்தலூர் தாலுகா பிதர்காடு அடுத்த பென்னை ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்முருகேசன் இடைநிற்றல் மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாணவர்களை அவரே அழைத்து வருகிறார். மேலும், பென்னை கிராமத்தில்8-ம் வகுப்பு முடித்து உயர்நிலைப்படிப்புக்கு செல்லாமல் பழங்குடியின மாணவர்கள் இருந்தனர்.

ஆசிரியர் முருகேசன் பெற்றோர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க அரசு நிறைவேற்றிவரும் எண்ணற்ற திட்டங்கள் விளக்கி, மீண்டும் படிப்பை தொடர வலியுறுத்தி வருகிறார்.

இதையடுத்து,பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒன்பதாம் வகுப்பில் சேர்க்க சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிவரும் தெய்வலட்சுமி, ஐயப்பன் ஆகியோரின் உதவியோடு அந்தக் குழந்தைகள் அம்பலமூலா பகுதியில் அமைந்திருக்கக்கூடிய உண்டு உறைவிட பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.