முறைகேடு புகார் தொடர்பாக அண்ணா பல்கலை.யில் சட்டப்பேரவை குழு ஆய்வு: முன்னாள் துணை வேந்தர்களை விசாரணைக்கு அழைக்க திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 8, 2023

முறைகேடு புகார் தொடர்பாக அண்ணா பல்கலை.யில் சட்டப்பேரவை குழு ஆய்வு: முன்னாள் துணை வேந்தர்களை விசாரணைக்கு அழைக்க திட்டம்



முறைகேடு புகார் தொடர்பாக அண்ணா பல்கலை.யில் சட்டப்பேரவை குழு ஆய்வு: முன்னாள் துணை வேந்தர்களை விசாரணைக்கு அழைக்க திட்டம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முன்னாள் துணைவேந்தர்களிடம் விசாரணை நடத்த சட்டப்பேரவை பொது கணக்கு குழு முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்குவதிலும், வெற்று சான்றிதழ்களை அச்சிடுவதிலும் ரூ.77 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கடந்த ஆண்டு மத்திய தணிக்கைதுறை (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இக்குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர்,செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தவறுகள் நடந்ததாக அறிக்கை:

அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தில் தவறுகள் நடந்துள்ளதாக சட்டப்பேரவைக்கு மத்திய கணக்காயர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் ஆய்வு நடைபெற்றது. என்னென்ன குறைகளை கண்டுபிடித்தனர், எதை நீக்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இதுசார்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு தீர்வை எட்டுவதற்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கொண்ட துணைக்குழு (Sub committee) அமைக்கப்படும். இந்த குழு 15 நாட்களுக்கு ஒருமுறை கூடி பேசி, குளறுபடிகளை சரிசெய்ய முடிவாகியுள்ளது.

இதுதவிர 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில் அப்போது இருந்த அதிகாரிகள் சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலர் அதில் இருந்து தப்பித்துள்ளனர் என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களில் முழு அறிக்கை:

உறுப்பினர்களின் ஆலோசனை பெற்று 3 மாதங்களில் முழு அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், பதிவாளர்களை அடுத்த கூட்டத்துக்கு அழைத்துள்ளோம். இந்த கூட்டம் அடுத்த 15 நாட்களில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சுரப்பாவுக்கு நோட்டீஸ்:

இக்கூட்டத்தில் பங்கேற்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு, தமிழக அரசால் அமைக்கப்பட்டது. அவரும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.