பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயனுள்ள படிப்புகள்; பிசியோதெரபி படிப்புகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 7, 2023

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயனுள்ள படிப்புகள்; பிசியோதெரபி படிப்புகள்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயனுள்ள படிப்புகள்; பிசியோதெரபி படிப்புகள்

பிசியோதெரபி படிப்புகள் ஒரு துணை மருத்துவ படிப்பாகும். இது உடல் செயல்பாடு மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்த நோயாளிகளுக்கு பிசியோதெரபி படித்த பிசியோதெரபிஸ்டுகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே பிசியோதெரபிஸ்ட்களின் பணி மறுவாழ்வு, காயம் தடுப்பு, பொது ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றுடன் சிரமப்படும் மக்களுக்கு உதவும் உன்னத பணியாகவும் உள்ளது. துணை மருத்துவப் படிப்புகளில் அதிகம் படிக்கப்படும் படிப்பு பிசியோதெரபி படிப்பு தான். உடல் இயக்கவியல் சார்ந்த இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக உள்ளது.

எலும்பு முறிவு, சதைப் பிடிப்பு, மூட்டு வலி என எலும்பு சார்ந்த பிரச்னைகளுக்கு தேவைப்படும் ஓர் தீர்வை பிசியோதெரபி படித்த பிசியோதெரபிஸ்ட்கள் வழங்குகிறார்கள். இளநிலை படிப்பான பிசியோதெரபி (BPT) என்பது 4½ வருட படிப்பாகும். உடல் இயக்கம் சார்ந்த நோய்களுக்கு மற்றும் வலிகளுக்கு எளிய உடற்பயிற்சிகள் மூலம் தீர்வு காணும் ஒரு படிப்பு. இந்த படிப்பில் சேர மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6 மாத கட்டாய மருத்துவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2வில் உயிரியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் இப்பாடப்பிரிவில் சேரலாம். மேலும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளை படித்தவர்களும் பிசியோதெரபி பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதே பிரிவில் முதுநிலை (MPT) பட்டப்படிப்புகளும் உள்ளன. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திலும் மற்றும் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் இப்பட்டப்படிப்புகள் சிறப்புற வழங்கப்படுகிறது. இந்த கல்லூரிகளில் பிளஸ் 2வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிசியோதெரபி என்பது வெப்ப பாய்ச்சல், எலக்ட்ரிக் மற்றும் தண்ணீர் தெரபி, டயாதெரபி, தசைகளுக்கு என பிரத்யேக மசாஜ் போன்ற பலமுறைகளை கையாள்வதே ஆகும். பிசியோதெரபிஸ்ட் என்பவர் உடல் மாறுபாடுகளை கொண்ட நோயாளிகள், வயது முதிர்வு காரணங்களால் ஏற்படும் உடல் தசை பிரச்னைகள், விபத்து, பிறவி குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குபவராக உள்ளார்கள். மேலும் நோயாளிகள் நோயிலிருந்து விடுபட முறையான உடற்பயிற்சிகளை கற்றுத் தருவது பிசியோதெரபிஸ்ட்களின் பணியாக உள்ளது.

பிறவியிலேயே ஏற்பட்ட உடல் உறுப்புக் குறைபாடுகள், விபத்து மற்றும் நோயினால் ஏற்படும் உடல் உறுப்புக் குறைபாடுகள் ஆகியவற்றில் இருந்து நோயாளிகள் நிவாரணம் பெற உதவுபவரே பிசியோதெரபிஸ்ட்களின் முக்கிய பணியாகும். ஒரு பிசியோதெரபிஸ்ட், மனித உடலமைப்பு, எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகள் குறித்து விரிவான அறிவைப் பிசியோதெரபி படிப்பின் மூலமாக பெறுகிறார்கள். இயன்முறை மருத்துவம் எனப்படும் பிசியோதெரபி படிப்புக்கான வரவேற்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. உடற்தசை பற்றிய இந்த படிப்பில் பல புதிய பிரிவுகளும் உருவாகியுள்ளன. விளையாட்டுத் துறையில் இப்படிப்புக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.

ஒவ்வொரு விளையாட்டிலும் அதற்கென சிறப்பு நிபுணத்துவம் பெற்ற பிசியோதெரபிஸ்ட்டுகளுக்கு வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. ஸ்போர்ட்ஸ், மஸ்குளோ கெலெட்டல், கார்டியோ பல்மோனரி, நியூரோலாஜிக்கல், கிரியாட்ரிக் பிசியோதெரபி, பீடியாட்ரிக் போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் பிசியோதெரபி படித்தவர்களுக்கு காத்திருக்கின்றன. இந்த படிப்பைப் படித்து முடித்த பிறகு பிசியோதெரபிஸ்ட்டாக மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பை பெறலாம். மேலும், தனியாகவும் பிசியோதெரபி மையம் திறந்து சுயமாக பணிபுரியும் வாய்ப்புகளை பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான மையம், சமூக சுகாதார நலக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், மனநல மருத்துவ மையங்கள், நர்சிங் ஹோம், தனியார் கிளினிக்குகள், தனியார் மற்றும் பொது மருத்துவமனைகள், நோயாளிகளின் இல்லங்களுக்கு அழைப்பின் பேரில் சென்று பயிற்சி செய்தல், புனர்வாழ்வு மையங்கள், விளையாட்டு கிளினிக்குகள் மற்றும் உயர்தர ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன.

இளநிலை பிசியோதெரபி படிப்பை முடித்துவிட்டு முதுநிலை பிசியோதெரபி படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்து விட்டு பிசியோதெரபி கல்லூரிகள் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணி வாய்ப்புகளையும் பெறலாம். மேலும் பிசியோதெரபி படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே தொடர்பு திறன், நிர்வாக திறன்கள், பொறுமை, தனிப்பட்ட திறன்கள், குழுவாக பணியாற்றும் திறன் போன்ற பொதுவான திறன்களை மேம்படுத்தினால் இந்த துறையில் சாதிக்கலாம்.

– பேராசிரியர் அ.முகமது அப்துல் காதர், கல்வியாளர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.