அரசு பள்ளி துணை தலைமை ஆசிரியர் கைது: கொரட்டூரில் பரபரப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 2, 2023

அரசு பள்ளி துணை தலைமை ஆசிரியர் கைது: கொரட்டூரில் பரபரப்பு

அரசு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்; துணை தலைமை ஆசிரியர் கைது: கொரட்டூரில் பரபரப்பு

அம்பத்தூர்: கொரட்டூரில் அரசு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட துணை தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகள் கொரட்டூர் அரசினர் தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும், தனது வகுப்பாசிரியர் பழனிவேலு (56) என்பவர் கடந்த சில நாட்களாக தன்னிடம் தவறாக நடந்துகொள்கிறார். இதுபோல் பல மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுகிறார். எனக்கு பள்ளிக்கு போகவே பிடிக்கவில்லை என கூறினாள். இதனால் அதிர்ச்சியடைந்தேன். எனவே, வகுப்பாசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.புகாரை பெற்றுக்கொண்ட அம்பத்தூர் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான போலீசார், பழனிவேலுவை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். சிறுமி தொடர்பான வழக்கு என்பதால் குழந்தைகள் நலக்குழுவுக்கு மாற்றப்பட்டது. சில்மிஷம் குறித்து குழந்தைகள் நலக்குழு விசாரித்தபோது, வகுப்பாசிரியர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் சென்னை அயனாவரம் செட்டிதெருவை சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி துணை தலைமை ஆசிரியரும் வகுப்பாசிரியருமான பழனிவேலுவை கைது செய்து அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், ‘‘கொரட்டூர் அரசு தொடக்கப்பள்ளியின் வகுப்பாசிரியர் பழனிவேலு கடந்த பல மாதமாக மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்துள்ளார். எங்களிடம் பிள்ளைகள் கூறியும் அலட்சியமாக இருந்துவிட்டோம். தற்போது வரம்பை மீறிய ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோல் எந்த ஆசிரியரும் இனி நடக்கக்கூடாது. மாணவிகள் பெற்றோர்களாகிய எங்களிடம் அதிக நேரம் இருப்பதைவிட ஆசிரியர்களிடம்தான் அதிகநேரம் செலவழிக்கின்றனர். இதுபோன்ற ஆசிரியர்களின் செயல் அருவருக்கதக்கதாக உள்ளது. நம்பக தன்மையை இழக்ககூடிய நிலையில் ஆசிரியர்கள் இருக்கின்றனர்” என வேதனையுடன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.