முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்காதது ஏமாற்றளிக்கிறது! - தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 25, 2023

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்காதது ஏமாற்றளிக்கிறது! - தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை!

காலை உணவுத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்காதது ஏமாற்றளிக்கிறது! - தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை!

*தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*மாநில மையம்*

*******

*ஊடகச் செய்தி*

*******

*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 11/2023 நாள்: 25.08.2023*

*அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் வரவேற்கத்தக்கது!*

*அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்காதது ஏமாற்றளிக்கிறது!*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து!*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:*

*தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு இன்று (25.08.2023) முதல் விரிவாக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம். இத்திட்டத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. அதேநேரத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.* *தமிழ்நாடு சட்டப்பேரவையில் 07.05.2022 அன்று விதி 110ன்கீழ் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அவ்வாறு அறிவிக்கப்பட்ட திட்டம் சில மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் தொலைதூரக் கிராமங்களில் உள்ள பள்ளிகள் சிலவற்றில் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டது. அத்திட்டம் இன்று (25.08.2023) முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது; பாராட்டுகிறது. www.kalviseithiofficial.com மாநிலம் முழுவதும் 31008 ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாகும்.*

*அதே நேரத்தில் இத்திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படாதது தமிழ்நாடு முழுவதும் ஒரு பகுதி குழந்தைகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறது.* *தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டம் கொண்டு வந்து வரலாற்றில் நிலைத்து நின்று விட்ட பெருந்தலைவர் காமராஜர், அத்திட்டத்தை சத்துணவுத் திட்டமாக உயர்த்தி, வலுப்படுத்தி ஏழை மக்களின் இதயங்களில் நிலையான இடம் பிடித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், சத்துணவுத் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தி அதன் தரத்தை உயர்த்தி வரலாற்றில் இடம் பிடித்த டாக்டர்.கலைஞர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் தாங்கள் அத்திட்டத்தைச் செயல்படுத்திய போது அரசுப்பள்ளி மாணவர்கள், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் என்று பாகுபாடு பார்க்கவில்லை. அனைத்துக் குழந்தைகளும் பயன்பெறும் வகையிலேயே திட்டத்தை செயல்படுத்தினார்கள்.*

*அவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்ட மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மதிய உணவுத் திட்டத்தை வழங்கும் அரசு காலை உணவுத் திட்டம் மட்டும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இல்லை என்று கூறுவது எவ்விதத்திலும் சரியானதல்ல. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 14 வகையான விலையில்லாப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை உணவுத் திட்டம் மட்டும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இல்லை என்பது நியாயமானதல்ல.* *தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகள் இல்லாத இடங்களில் அரசு உதவிபெறும் பள்ளிகள் தொடங்கப்பட்டன என்பதும், அவ்வாறு அரசு உதவிபெறும் பள்ளிகள் தொடங்கப்பட்ட இடங்களில் அரசுப் பள்ளிகள் தொடங்கப்படவில்லை என்பதும் வரலாற்று உண்மை. எனவே, எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்தப் பள்ளிகள் உள்ளதோ அவற்றில் சேர்ந்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் பயின்று வருகிறார்கள். www.kalviseithiofficial.com அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இரண்டு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் சமூக, பொருளாதார நிலையில் ஒரே நிலையில் உள்ளவர்கள். அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் தமிழ்நாடு அரசின் இலவசக் கல்வியைப் பெற்று வருபவர்கள் தான். எனவே, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைப் போல கருதக்கூடாது.* www.kalviseithiofficial.com

*எனவே, இத்தகைய சூழலில் அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத்திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க திட்டமாக இருந்தாலும், இத்தட்டத்தின் பயன் மாநிலம் முழுவதும் ஒரு பகுதிக் குழந்தைகளுக்கு கிடைக்காத சூழல் என்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, காலை உணவுத்திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கும் உடனடியாக விரிவுபடுத்தி அத்திட்டத்தின் பயன் ஏழைக் குழந்தைகள் அனைவருக்கும் முழுமையாகக் கிடைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*இப்படிக்கு*

*ச.மயில்*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.