வாக்குச்சாவடி பணிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 17, 2023

வாக்குச்சாவடி பணிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி!



வாக்குச்சாவடி பணிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி!

தமிழ்நாட்டின் பல்வேறு வட்டங்களில் ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிக்காக (LD) வழங்கப்பட்டுள்ள செயலியில், ஒவ்வொரு ஆசிரியரும் வாக்களரை நேரில் சந்தித்து வினாக்களுக்கான பதில்களை பெற்று பணியினை நிறைவு செய்ய குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் 45 நிமிடம் வரை ஒதுக்க வேண்டி உள்ளதால் மாணவர்களுக்கான கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தொடக்கக்கல்வித் துறை இயக்குநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுகள் நடைபெற்று முடித்து விட்டன.

தொடக்கக்கல்வித் துறையில் நீதிமன்ற தடை ஆணை காரணமாக ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் என எந்த விதமான மாறுதல் கலந்தாய்வும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறவில்லை.இதனால் காலியிடங்கள் இருந்தபோதும் வாய்ப்புள்ள ஆசிரியர்களுக்கு மாறுதல் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை.

ஆகவே, நீதிமன்ற தடையாணையை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு அனைத்து வித பொது மாறுதல் கலந்தாய்வினை நடத்திட வேண்டும். கடந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் தொடக்கக்கல்வித் துறையில் ஆறு முதல் எட்டு வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். ஆனால், இந்த கல்வியாண்டில் இன்று வரை மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசாணை வெளியிடப்படாததால், அறிவிப்பின் பயனை மாணவர்கள் பெற இயலாத சூழல் உள்ளது.

எனவே, விரைவில் அரசாணை வெளியிட வேண்டும்.

தொடக்கக்கல்வித் துறையில் 2004ஆம் ஆண்டு முதல் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய அரசாணை வெளியிட வேண்டும். 17 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், விரைவில் புதிய அரசாணை வெளியிடும் பணியினை விரைவுபடுத்திட கேட்டுக் கொள்கிறோம்.

மாநிலத்தின் பல்வேறு வட்டங்களில் ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரி பணி (LD) வழக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் பணிக்கு என்று செயலி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் வாக்களரை நேரில் சந்தித்து வினாக்களுக்கான பதில்களைப் பெற்று பணியினை நிறைவு செய்ய வேண்டி உள்ளது.

ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் 45 நிமிடம் வரை ஒதுக்க வேண்டி உள்ளது.

இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியினை மாற்று ஏற்பாடுகள் செய்து இல்லம் தேடி கல்வி மற்றும் பிற தன்னார்வார்கள் மூலம் செயல்படுத்திட ஆவண செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.