சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 7, 2023

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்



Application distribution for Siddha, Ayurveda, Unani, Homeopathy courses starts online - சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடக்கம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதேபோல, 28 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,820 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி (நேற்று) தொடங்கியது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தகுந்த ஆவணங்களுடன் வரும் 25-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.