ஆசிரியர்களின் மன உளைச்சலை போக்கும் கிரிக்கெட் லீக் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 6, 2023

ஆசிரியர்களின் மன உளைச்சலை போக்கும் கிரிக்கெட் லீக்



ஆசிரியர்களின் மன உளைச்சலை போக்கும் கிரிக்கெட் லீக்

விளையாட்டை மறந்து போன ஆசிரியர்களின் மனஉளைச்சலை போக்கும் வகையில் மதுரை மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் இணைந்து டி.சி.எல்., எனும் டீச்சர்ஸ் கிரிக்கெட் லீக் போட்டியை ஆக., 15ல் நடத்த உள்ளனர்.

திருமணமான பின் வீடு, பாடம் என்பதைத் தாண்டி ஆசிரியர்கள் சிந்திப்பதே இல்லை. எங்களை நாங்களே சந்தோஷப்படுத்தி கொள்வதற்காகத்தான் டீச்சர்ஸ் கிரிக்கெட் லீக் போட்டியை தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் தொடங்க உள்ளோம் என்கிறார் போட்டியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ரத்தினசாமி. மதுரை செயின்ட் பிரிட்டோ பள்ளி தாவரவியல் ஆசிரியர் ஜோசப் கூறியதாவது:எங்களுக்கும் புத்துணர்வு வேண்டும் என்பதற்காகத்தான் கிரிக்கெட் விளையாட்டைத் தேர்ந்தெடுத்தோம். மதுரை, மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில் இருந்து தலா 3 அணிகளை உருவாக்கினோம். 12 ஆடவர் அணியில் அனைத்து பள்ளிகளையும் சேர்ந்த இளம் ஆசிரியர் முதல் ஓய்வுபெற உள்ள ஆசிரியர்கள் வரை வீரர்களாக சேர்த்துள்ளோம். ஆசிரியைகள் 2 அணியாக உள்ளனர். அணிகளை உருவாக்கியதும் மதுரை சூப்பர் கிங்ஸ், மேலுார் சூப்பர் கிங்ஸ், மதுரை டைட்டன்ஸ், பேந்தர் என விருப்பம் போல பெயர் வைத்து சந்தோஷப்பட்டனர்.

பெரும்பாலான ஆசிரியர்கள் திருமணத்திற்கு பின் தனிப்பட்ட சந்தோஷத்தை பற்றி சிந்திப்பதில்லை.விளையாட்டு வீரராக இருந்தாலும் திருமணத்திற்கு பின் விளையாடுவதை நிறுத்தி விடுகின்றனர். அவர்களை மீண்டும் உற்சாகப்படுத்தி பங்கேற்க வைக்கும் முயற்சியில் பத்து ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளோம். 20 முதல் 60 வயதை தொடும் அனைவருமே உற்சாகமாக பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஆக., 15 மதியம் 2:30 மணிக்கு மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் நாடார் பள்ளியில் லீக் போட்டி தொடங்குகிறது. அதன்பின் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் சனி, ஞாயிறுகளில் போட்டிகளை நடத்துவோம், என்றார்.

- தினமலர் நாளிதழ் செய்தி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.