பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை விண்ணப்பம், டோக்கன் இன்று முதல் விநியோகம்: வீடு, வீடாக சென்று வழங்கப்படும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 19, 2023

பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை விண்ணப்பம், டோக்கன் இன்று முதல் விநியோகம்: வீடு, வீடாக சென்று வழங்கப்படும்



பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை விண்ணப்பம், டோக்கன் இன்று முதல் விநியோகம்: வீடு, வீடாக சென்று வழங்கப்படும்

தமிழகம் முழுவதும் மகளிர் உரிமை தொகைப்பெறுவதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வீடு வீடாக இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் 1 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, நிதித்துறை சார்பில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளான செப்.15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் இன்று முதல் வீடு, வீடாக ரேஷன்கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் பணி தொடங்க உள்ளன. குறிப்பாக, கொடுக்கப்படும் படிவங்களில் யார் எந்த தேதியில் முகாம்களில் பங்கேற்கலாம் என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

அதேபோல, முகாம் நடைபெறும் ரேஷன் கடைகளில் தமிழில் பலகை வைக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த உரிமை தொகை பெறுவதற்கான முகாம்கள் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடத்தப்படுகிறது.

அதேபோல, விண்ணப்பங்களை ரேஷன் கடை பணியாளர்களிடம் இருந்து பெற்ற குடும்ப தலைவிகள் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் முகாம் நடைபெறும் அந்தந்த ரேஷன் கடைக்கு சென்று அங்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக்கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பொழுது, ஆதார் அட்டை, குடும்ப அட்டை , மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். விண்ணப்பத்துடன் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை.

ஏற்கனவே, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், சமீபத்தில் தலைமைச்செயலர் சிவ்தாஸ்மீனா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு எந்தவொரு தகுதியான பயனாளிகளும் விடுபட்டுவிடக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.