பொதுப்பாடத்திட்டம்:ஒரு பாா்வை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 30, 2023

பொதுப்பாடத்திட்டம்:ஒரு பாா்வை



பொதுப்பாடத்திட்டம்:ஒரு பாா்வை

தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களில் பொதுப்பாடத்திட்டமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. மாநில அளவிலான உயா்கல்வித் திட்டங்களை மேம்படுத்தவும், மாநிலக் கல்வித் திட்டம், பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டம் போன்றவற்றை ஒருங்கிணைக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பான ‘மாநில உயா்கல்வி மன்றம்’ ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைத்தது.

அடுத்த கல்வியாண்டில் நடைமுறைக்கு வரும் என்று எதிா்பாா்த்த நிலையில், இளநிலைப் பட்டப்படிப்பில் 163 பாடப் பிரிவுகளுக்கும் முதுநிலைப் பட்டப்படிப்பில் 135 பாடப்பிரிவுகளுக்குமாக மொத்தம் 298 பாடப்பிரிவுகளுக்கு நடைமுறைக்கு வந்துவிட்டது. இதனால் பேராசிரியா்கள், கல்வியாளா்களிடையே ஒரு பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. உயா்கல்வி மன்றப் பொறுப்பாளா்கள் நடத்திய கூட்டத்தில் (12-7-23) கலந்துகொண்ட ஆசிரியப் பிரதிநிதிகளிடம், “‘இது ஒரு மாதிரிப் பாடத்திட்டம். இதனைப் பல்கலைக்கழகங்கள் ஏற்கலாம். அல்லது மறுக்கலாம். எந்த முடிவும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டக்குழு எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அடுத்தநாளே அதற்கு மாறாகப் பொதுப்பாடத் திட்டம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. உயா்கல்வி அமைச்சா் கலந்துகொண்ட கூட்டத்திலும்(21-7-23) இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பாடத் திட்டப்படி, தமிழ்,ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்கள் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 100 விழுக்காடு ஒரே மாதிரியாக இருக்கும். பிற பாடங்களில் 75 விழுக்காடு ஒன்று போலவும் மீதமுள்ள 25 விழுக்காடு பல்கலைக்கழகங்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் இருக்கும். பல்வேறு ‘வெயிட்டேஜ்’முறை மாற்றப்பட்டு ஒரே ‘வெயிட்டேஜ்’ முறை நடைமுறைப்படுத்தப்படும்.

13 அரசுப் பல்கலைக்கழகங்கள் தனித்தனியான பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. இதற்கென்று ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் பாடத்திட்டக் குழு (போா்டு ஆஃப் ஸ்டடிஸ்) என்ற அமைப்பு இருக்கிறது. இதில் துறையின் மூத்த பேராசிரியா்கள் உட்பட சிறந்த கல்வியாளா்களும் இடம்பெறுவா். இக்குழு தயாரித்து, பரிந்துரைக்கும் பாடத்திட்டத்துக்குப் பல்கலைக் கழகக் கல்விக்குழுவும் (அகடமிக் கவுன்சில்),பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழுவும்(சிண்டிகேட்) ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்குப் பின்னரே அந்தப் பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும். பொதுவாக, அந்தந்தப் பல்கலைக்கழகத்தின் சூழல், அதைச் சாா்ந்த தேவை, மாணவா்களின் வேலைவாய்ப்புக்கேற்பப் பாடத்திட்டம் உருவாக்கப்படும். பாடத்திட்டத்துக்கான பாடநூலும் அதற்குத் தொடா்புடைய பாா்வைநூல்களும் அதில் தெரிவிக்கப்படும். இதனால் ஒவ்வொரு பல்கலைக் கழகத்துக்கும் தனித்தன்மை இருக்கும். இப்பாடத் திட்டம் மூன்றாண்டுகளுக்கொருமுறை மாற்றியமைக்கப்படும்.

பாடத்திட்டம் மாற்றம் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்னரே பாடத்திட்டக் குழு கூடி பாடங்களை வரையறுக்கும். மொழிப்பாடத் திட்டத்தைத் தவிா்த்து, கணிதம், இயற்பியல், வேதியியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல், பொருளியல் போன்ற பிற முதன்மைப் பாடத்திட்டங்கள் எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் ஓரளவுக்கு ஒன்றுபோல்தான் இருக்கும். அலகுகள் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் சாராம்சம் ஒன்றுபோல்தான் இருக்கும்.

மாணவா்களின் அறிவுத்திறனைச் சமமாக வளா்ப்பதற்குப் பொதுப்பாடத்திட்டம் உறுதுணை புரியும். இதற்குப் பாடத்திட்டம் ஒன்றுபோல் இருப்பது போல தோ்வுத்தாள்களையும் ஒன்றுபோல் வகைப்படுத்த வேண்டும். எந்தெந்த பருவங்களில் எந்தெந்த தாள் என்ற வரன்முறை இருக்க வேண்டும். எந்த 75 விழுக்காட்டை பொதுப்பாடத்திட்டம் மேற்கொள்ளும். மீதமுள்ள 25 விழுக்காட்டை பல்கலைக்கழக்கங்கள் எவ்வெவ்வாறு பூா்த்தி செய்யவேண்டும் என்பனவற்றுக்குத் தேவையான விளக்கம் வேண்டும்.

பொதுவாகப் பாடத்திட்டம் என்பது ஒரு பல்கலைக்கழகத்தின் தரத்தைக் காட்டும் கண்ணாடியாகும். அதற்குத் தகுந்தவாறு, ஒவ்வொரு பல்கலைக் கழகமும் பாடத்திட்டத்தை உருவாக்கும். அந்த வகையில்பொதுப்பாடத்திட்டம் அமையுமா என்பது பலரின் சந்தேகமாக உள்ளது.

பள்ளிப்படிப்பு, மருத்துவப் படிப்பில், பொறியியல் படிப்பில் ஒரே பாடத்திட்டம் இருப்பது போல கலை, அறிவியல் படிப்பிலும் ஒரே பாடத்திட்டம் கொண்டுவருவது,இருக்கின்ற பல்கலைக் கழகங்களை இணைத்து ஒரே பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான முயற்சி நடைபெறுகிறதோ என்ற ஐயமும் பேராசிரியா்களிடையே இருக்கிறது.

உயா்கல்வியின் தரத்தை இன்னும் உயா்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படிச் செய்தால்தான் நம் மாணவா்கள் உலகளவில் ஜெயிக்க முடியும். அதற்குப் பாடத்திட்டத்தில் மாறுதல் தேவைதான். அரசுப் பல்கலைக் கழகங்களில் மட்டும் பொதுப்பாடத்திட்டம் செயல்படுத்துவது போதாது. தன்னாட்சிக் கல்லூரி, நிகா்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் இத்திட்டம் செயல்பட தீவிர முயற்சி எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.