கப்பலுக்கு மாலுமி; பள்ளிக்கு தலைமையாசிரியர்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 2, 2023

கப்பலுக்கு மாலுமி; பள்ளிக்கு தலைமையாசிரியர்!

கப்பலுக்கு மாலுமி பள்ளிக்கு தலைமையாசிரியர்

தலை இன்றி உடல் இயங்காது; தலைவர் இன்றி எதுவும் நடக்காது

தலைமை என்ற வார்த்தை தன்னிகரற்றது.தலைமைப்பண்பை ஒருங்கே கொண்டவர்களால் மட்டுமே அப்பணியை செவ்வனே செய்யமுடியும்.தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரர் ஆக முடியாது.

இன்று தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளி களில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

பல்வேறு காரணங்களால் இப்பதவியை அலங்கரிக்க சில நபர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

நீதிமன்ற வழக்குகளும் கூட இப்பதவிக்குச் செல்ல தடையாக உள்ளன.

நிர்வாகத் தலைமை என்பது ஒரு சுகமான சுமை.இது ஒரு வகை கலை. இதற்கென குணாதிசயங்கள் கண்டிப்பாக தேவை.'தனக்குக் கீழ் பணிபுரிபவர்' என்ற வார்த்தைக்கும் 'தன்னோடு பணிபுரிபவர்'என்ற வார்த்தைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் அடங்கியிருக்கின்றன.இதனை உண்மை யான தலைமைக் கலை கற்றவராலேயே உணர முடியும்.

இதில்தான் பிறரின் ஒத்துழைப்பு பெறும் இரகசிய சொல் அடங்கியிருக்கிறது.

ஓடி வந்து உதவும் குணம் உங்கள் பணியாளர்களுக்கு இருப்பதும் மாய்வதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.எனக்கு எவரது ஆதரவும் இல்லை என புலம்பி திரியும் தலைமைப் பொறுப்பாளர்களை நாம் காண்பது இயல்பு.

இதற்கு இன்று வரை தன்னை அவர் மாற்றிக்கொள்ளாததே காரணம். காட்சிக்கு எளியவரையும் கடுஞ்சொல் கூறாதவரையும் உலகம் விரும்புகிறது.இது தலைமைப் பொறுப்பை ஏற்பவருக்கு முற்றிலும் பொருந்தும்.இதை திருவள்ளுவர்

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்"
என்கிறார்
மிகப்பெரிய தலைமைப்பொறுப்பை ஏற்று மருந்துக்குக்கூட கடுஞ்சொல் கூறாமல் வாழ்ந்து, உடலால் மாய்ந்து பிறர் மனங்களில் வாழ்பவர் திரு.அப்துல்கலாம் ஐயா அவர்கள். நேர்மையும், நீதியும் தவறாதவர்.தலைமை பண்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்.

தலைமைப் பண்பில் முக்கியமான அம்சம் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை கனிவுடனும் இன்முகத்துடன் எதிர்கொள்ளும் தன்மையே.

இன்று பெரும்பாலானோருக்கு இப்பண்பு இருப்பதாகத் தெரியவில்லை.

தன்மீது குற்றம் சுமத்தியவரை கொலைவெறி கண்ணோட்டம் கொண்டு வார்த்தை தாக்குதல் நடத்துவோரே அதிகம்.

இவர்களால் திறம்பட தலைமைப்பீடத்தை அலங்கரிக்க இயலாது.சொல்லப்போனால் இப்பீடத்தை வீணாக்கத்தான் முடியும். எதற்கும் பொருத்தமற்ற இவர்கள் தன்னை அதில் தகவமைத்துக்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு,பிறரின் நிம்மதியைப் பறித்து நோயாளிகளாக்கி, ஓய்வுக்கு பின் எங்கே என் நிம்மதி என தேடி வரும் இவர்கள், இருந்தாலும் மறைந்தாலும் யாருக்கும் பாதகமில்லை.இதுபோன்ற தலைமைகள் சற்று ஓய்வெடுப்பது நன்று. தலைமையாசிரியர் என்பவர் பள்ளியின் முன்னோடி ஆசிரியர். காலையில் அவர் கண்களில் தான் வாசற்கதவின் பூட்டுகள் தென்பட வேண்டும். வகுப்பறை கதவுகள் யாவும் இவரது வருகைக்காக தினம் தினம் காத்திருக்க வேண்டும்.அதுபோல் மாலையில் இவரது பாதத்தடங்களே அன்றைய நாளின் கடைசி முத்திரையாக இருக்க வேண்டும்.

அவர் பணிபுரிந்த ஒவ்வொரு நாளும் சினம் தோய்க்கா நன்னாளாய் பொன்னாளாய் நலமுடனே கழித்திட வேண்டும்.இவர் தான் வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ,ஊரார்கள் கேட்பார்களேயானால் அவர் மிகச்சிறந்த நிர்வாகத்திறன் பெற்ற தலைமையாசிரியரும் வெற்றியாளரும் ஆவார்.

ஆனால் இவர் எப்போது ஓய்வு பெறுவார் என ஏக்கத்துடன் வினவினர்களேயானால் அவர் பணியில் தோற்றுவிட்டார் என்றே பொருள்

காலியாக உள்ள பதவிகள் விரைவில் வெற்றியாளர்களைக் கொண்டு நிரப்பினால் சமுதாயம் சீர்படும்.அவரது பணிக்காலம் காலம்கடந்தும் போற்றுதல் பெறும். அது இல்லாமல் வெறும் சம்பள உயர்வுக்காகவும் நமக்கு வாய்ப்பு கிடைத்தது என இப்பதவியை தேர்ந்தெடுத்து இருக்கையை மட்டும் தேய்த்துவிட்டு போனால் காலம் நிச்சயம் மன்னிக்காது.

நன்றி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.