ஆசிரியர் சங்கங்களுக்கு சைவ விருந்து; நள்ளிரவு வரை நடந்தது கருத்து கேட்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 25, 2023

ஆசிரியர் சங்கங்களுக்கு சைவ விருந்து; நள்ளிரவு வரை நடந்தது கருத்து கேட்பு



ஆசிரியர் சங்கங்களுக்கு சைவ விருந்து; நள்ளிரவு வரை நடந்தது கருத்து கேட்பு

பள்ளிக் கல்வித் துறைக்கு எதிராக போராட்டம் அறிவித்த, ஆசிரியர் சங்கங்களை சமாதானப்படுத்த, சைவ விருந்துடன், இரண்டு நாட்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகளிடம், நள்ளிரவு வரை அமைச்சரும், அதிகாரிகளும் பேச்சு நடத்தினர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தங்கள் பிரச்னைகள் தீரும் என, ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் தீர்வு கிடைக்காததால் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இதற்கு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விஷயத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ ஜியோ அமைதியாக இருந்தது.

அதனால், தொடக்க பள்ளி ஆசிரியர் சங்கங்களும், உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர் சங்கங்களும் தனித்தனியாக, கூட்டமைப்புகளை உருவாக்கின.

அமைச்சர் பேச்சு

புதிய கூட்டமைப்புகள் சார்பில், மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அதனால், ஆசிரியர் சங்கங்களை சமாதானப்படுத்தும் வகையில், அமைச்சர் மகேஷ் தலைமையில், கடந்த, 22, 24ம் தேதிகளில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.

பள்ளிக் கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், தனியார் பள்ளி இயக்குனர்கள் நாகராஜ முருகன், தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, பாடநுால் கழக செயலர் குப்புசாமி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.

மொத்தம், 75 சங்கங்களின் நிர்வாகிகள் தனித்தனி குழுவாக அழைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு சைவ விருந்து வழங்கப்பட்டதுடன், நண்பகல் முதல் நள்ளிரவு வரை, அவர்களிடம் அமைச்சர் மகேஷும், அதிகாரிகளும் கருத்துக் கேட்டனர்.

அப்போது, 'கடந்த காலத்தை மறந்து விடுங்கள். இனி, எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். போராட்டத்தை கைவிடுங்கள்' என, கேட்டுக் கொண்டனர். பிரச்னைகளுக்கு தீர்வு

இதனால், 'பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறதோ, இல்லையோ; அமைச்சரும், அதிகாரிகளும் நேரடியாக குறை கேட்டார்களே' என்ற திருப்தியில், சங்க நிர்வாகிகள் ஊருக்கு திரும்பினர்.

'அப்பாடா, இன்னும் சில மாதங்களுக்கு போராட்டம் இருக்காது, சங்கங்களை சமாளித்து விட்டோம்' என்ற பெருமூச்சுடன், பள்ளிக்கல்வி அதிகாரிகளும், தங்கள் வழக்கமான பணிகளை துவக்கி உள்ளனர்.

'நம்பிக்கை இருக்கு!'

''ஆசிரியர்கள், மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் சிக்கல் நிலவியது. தற்போது பள்ளிக்கல்வி துறை செயல்பாட்டில் மாற்றம் தெரிகிறது. அமைச்சரின் கருத்து கேட்பும், இயக்குனர்களின் எளிய அணுகுமுறையும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனாலும், எங்கள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், எங்கள் சங்க நடவடிக்கைகள் தொடரும்.

- பேட்ரிக் ரெய்மாண்ட்

பொதுச் செயலர்,

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.