TNPSC : குரூப்-4 பணியிடங்கள் உயர்வு அறிவிப்பு வெளியாகுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 12, 2023

TNPSC : குரூப்-4 பணியிடங்கள் உயர்வு அறிவிப்பு வெளியாகுமா?



TNPSC : குரூப்-4 பணியிடங்கள் உயர்வு அறிவிப்பு வெளியாகுமா?

அரசுப் பணி கனவுடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ள நிலையில், நேர்காணலுக்கு முன்பு குரூப்-4 தேர்வர்களுக்கான பணியிடங்களை அரசு உயர்த்தி அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பட்டப் படிப்பை முடித்து வெளியே வரும் இளைஞர்களில் சுமார் 40 சதவீதம் பேரின் கனவு, அரசுப் பணியாகத்தான் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை, ஆண்டுக்கு சுமார் 33 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் உருவாகின்றனர். இவர்களில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசுப் பணி வாய்ப்புக்கான முயற்சிகளிலேயே அதிகக் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், அவர்களில் எத்தனை பேரின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கிறது என்பதுதான் கேள்விக்குறியாகவே உள்ளது. அரசுத் துறைகளில் ஆண்டுதோறும் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பணி ஓய்வு பெறுகின்றனர். ஆனால், அத்தனைக் காலிப் பணியிடங்களும் நிரப்பப்படுவதில்லை என்பதே உண்மை. இதில் சுமார் 20 முதல் 30 சதவீத பணியிடங்கள் மட்டுமே அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன. இது, இளைஞர்களின் அரசுப் பணி முயற்சிக்கு மிகப் பெரிய தடையாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத் தேர்வுகள் நடத்தப்பட்டு, குரூப்- 4 நிலையில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி, கடந்த 2018-ஆம் ஆண்டில் 12 ஆயிரம் பேரும், 2019-இல் ஏறத்தாழ 9,800 பேரும் அரசுப் பணி வாய்ப்புப் பெற்றனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக 2020, 2021-ஆம் ஆண்டுகளில் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் குரூப்-4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியானது. முதல் கட்டமாக 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டது.

2 ஆண்டுகள் அரசுப் பணியாளர் தேர்வு நடைபெறாத நிலையில், ஆண்டுக்கு சராசரியாக 10 ஆயிரம் என்ற அடிப்படையில், ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்த அரசுப் பணி நாடுபவர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், மறு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, 10,117 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானோர் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த எண்ணிக்கை அரசுப் பணி நாடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. 2 ஆண்டுகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு நடைபெறவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு, காலிப் பணியிடங்களை உயர்த்தி, இளைஞர்களின் அரசுப் பணி கனவை நனவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்போதே உரக்க ஒலிக்கத் தொடங்கியது. இருப்பினும், அறிவிக்கப்பட்டபடியே 425 கிராம நிர்வாக அலுவலர்கள், 4,952 இளநிலை உதவியாளர்கள், 3,311 தட்டச்சர்கள், 1,176 ஸ்டெனோ தட்டச்சர் (நிலை 3) உள்பட 10,117 பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜூலை 24-ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. வழக்கமாக ஓரிரு மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற நிலையில், பல்வேறு பிரச்னைகள் காரணமாக இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாவதில் நீண்ட நெடிய தாமதம் ஏற்பட்டது. ஏறத்தாழ 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.

ஏற்கெனவே, 2 ஆண்டுகள் தேர்வு நடைபெறாத நிலையில், ஏறத்தாழ மீண்டும் ஓராண்டு காலம் (8 மாதங்கள்) தேர்வு முடிவுகள் வெளியிடுவதிலேயே தாமதப்படுத்தப்பட்டதால், காலிப் பணியிடங்களை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பணி வழங்கப்படும் என ஏற்கெனவே திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, குறைந்தபட்சம் 30 ஆயிரம் பேருக்காவது பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்கின்றனர் அரசுப் பணி நாடுபவர்கள்.

இந்த நிலையில், 2022- 23 குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை கடந்த மே 5-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தனர். இருப்பினும், சுமார் 1,300 பேரின் சான்றிதழ்கள் பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் தேர்வாணையத்தால் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, தொடர்புடைய தேர்வர்கள் குறைபாடுகளின்றி சான்றிதழ்களை மீள் பதிவேற்றம் செய்ய, ஜூன் 5-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது. இன்னும் ஓரிரு வாரங்களில் நேர்காணல் நடைபெறும் எனத் தெரிகிறது. நேர்காணலுக்கு முன்பாக, பணியிடங்களை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிடவில்லையெனில், 10,177 பேருக்கு மட்டுமே பணி வாய்ப்புக் கிடைக்கும். இது, அரசுப் பணி கனவுடன் வலம் வரும் இளைஞர்கள் பலருக்கும் பெரும் ஏமாற்றமாக இருக்கும் என்பதுடன், திமுகவின் தேர்தல் வாக்குறுதியையும் கேள்விக் குறியாக்கும். எனவே, நேர்காணலுக்கு முன்பாக பணியிட எண்ணிக்கையை அரசு உயர்த்த வேண்டும் என்பது அரசுப் பணி நாடுபவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கையாகவும் உள்ளது.

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த போட்டித் தேர்வர் பாண்டித்துரை கூறியதாவது: குரூப்- 4 தேர்வு மூலம் அரசுப் பணிக்கு முயற்சிப்பவர்களில், பெரும்பாலானோர் முதல் தலைமுறை பட்டதாரிகள்; போட்டித் தேர்வுக்கென சிறப்புப் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயில பொருளாதார வசதி இல்லாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அரசுப் பணியையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அரசு உடனடியாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.

கடந்த 2018-இல் தேர்வுக்குப் பின்னர் 2,300 பணியிடங்களும், 2019-இல் ஏறத்தாழ 750 பணியிடங்களும் உயர்த்தப்பட்டு, இளைஞர்களுக்குப் பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. நிகழாண்டிலும் நேர்காணலுக்கு முன்பாக பணியிடங்களின் எண்ணிக்கையை முதல்வர் உயர்த்தி அறிவிப்பார் என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.