நம்ப வைத்து ஏமாற்றிய திமுக அரசு - ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் அறிக்கை - 11.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 11, 2023

நம்ப வைத்து ஏமாற்றிய திமுக அரசு - ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் அறிக்கை - 11.06.2023

நம்ப வைத்து ஏமாற்றிய திமுக அரசு

11 ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை திமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பழ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்களின் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்து மே மாதம் 22 ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.அப்போராட்டமானது 24 ஆம் தேதிவரை நீடித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சங்க நிர்வாகிகளை அழைத்து தற்போதைய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு.அறிவொளி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது நீங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்,கடந்த 11 ஆண்டுகளாக உங்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படவில்லை.கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டிற்கான மே மாத ஊதியம் என இரண்டு வருடங்களுக்கான மே மாத ஊதியம் தருவதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன் என சொன்னார்.அதனடிப்படையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். ஆனால் 9.6.2023 அன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் திட்ட இயக்குநர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்திய அரசாணை 177 ஐ சுட்டிக்காட்டி அதன்படி இவர்களுக்கு மே மாத ஊதியம் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அரசாணை எண் 177ல் மே மாதம் ஊதியம் இல்லை என்றோ,11 மாதங்களுக்கு தான் ஊதியம் வழங்கப்படும் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை.மேலும் எங்கள் பணிநியனம் குறித்து 26.8.2011 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் அறிவித்த போது 16549 ஆசிரியர்களுக்கு 99 கோடியே 29 இலட்சம் செலவாகும் என குறிப்பிட்டிருந்தார். அப்போது மாதம் 5,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது.அதன்படி பார்த்தால் அவர் குறிப்பிட்ட தொகை 12 மாத சம்பளத்திற்கான தொகை. அதுமட்டுமில்லாமல் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் என்பது RTE விதியின் கீழ் அனைவருக்கும் கட்டாய கல்வித்திட்டம்(தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்) நியமிக்கப்பட்டதாகும்.

இத்திட்டமானது மத்திய அரச சின் 60%,மாநில அரசின் 40% நிதி பங்களிப்போடு நடைபெறுவதாகும்.இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கான சம்பளத்தில் மத்திய அரசு 60% ம்,மாநில அரசு 40% கொடுக்கிறது.இதற்கென ஆண்டுதோறும் Project Approval Board மூலம் Annual work plan and Budget கூட்டம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுகிறது.அந்த கூட்ட அறிக்கையில் மத்திய அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்கு 12 மாத சம்பளத்திற்கான நிதி ஒதுக்குவதாகத் தான் குறிப்பிட்டுள்ளது.ஆனால் 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்படுவதில்லை.

மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் மத்திய அரசின் 60% போக மாநில அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டதற்கு "மாநில அரசு மூலம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தனியாக ஒதுக்கீடு எதுவும் இல்லை" என பதில் கொடுத்துள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 181 ல் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என கூறியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணிநிரந்தரம் செய்வோம் என சொன்னவர்கள் எங்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய பலன்களை கொடுக்காமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும்,மன வேதனையையும் அளிக்கிறது.மாண்புமிகு முதல்வர் அவர்களும்,மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் இவ்விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக மே மாத ஊதியத்தையும்,தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ள பணிநிரந்தரத்தையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

2 comments:

  1. விடியாத திமுக ஆட்சியில் எல்லாருக்குமே பட்டை நாமமே.

    ReplyDelete
  2. வார்தை வித்தைகள் கற்றது திமுக

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.