இரண்டு நாட்களில் நான்கு மருத்துவ மாணவர்கள் இறக்கக் காரணம்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 18, 2023

இரண்டு நாட்களில் நான்கு மருத்துவ மாணவர்கள் இறக்கக் காரணம்?



மருத்துவ மாணவர்கள் இறக்கக் காரணம்?

'இரண்டு நாட்களில் நான்கு டாக்டர்கள் மரணம்' என்ற தலைப்பில் செய்தித்தாள்களில் வந்த செய்தி, விவாதத்திற்குரியது. மருத்துவத் துறையும், மனித உரிமை ஆணையமும் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி அது.

சென்னையில் மருத்துவம் படிக்கும் ஒரு சில மாணவர்களை நான் நேரடியாக அறிவேன். அந்த அடிப்படையில், அங்கே பயிற்சி மருத்துவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை, வெளியில் சொல்ல வேண்டிய கடமையும் இருக்கிறது.

'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்'

என்பது வள்ளுவர் வாக்கு.

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, சிகிச்சை அளித்தால், விரைவில் நோய் குணமாகும். அதை விட்டு விட்டு, வேறு எந்த வகையிலும் சிகிச்சை அளிப்பது நன்மை பயக்காது என்பதே இந்தக் குறளின் பொருள்.

நோய்க்கு மருத்துவம் பார்ப்பவர்கள் மருத்துவர்கள். அந்த மருத்துவர்களுக்கு ஒரு நோய் வந்தால், மருந்து மாத்திரை சாப்பிட்டு உடலைத் தேற்றிக்கொள்வர். ஆனால் மன அழுத்தம் வந்தால் அதை யாரிடம் போய் சொல்வர்?

குறிப்பாக ஐந்தாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு, இத்தகைய மன அழுத்தத்தைக் கொடுக்கிறது மருத்துவத் துறை.

ஐந்தாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், பயிற்சி டாக்டர்களாக பல்வேறு அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஒரு பயிற்சி மருத்துவர், வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டும்.

அத்துடன் வாரத்திற்கு ஒரு முறை ஓய்வில்லாமல் 36 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்தாக வேண்டும். அதாவது இரண்டு பகல், ஓர் இரவு வேலை செய்தாக வேண்டும்.

இன்று காலை ஏழு மணிக்கு பயிற்சிக்குச் சென்றால், இன்றிரவு நாளை பகல் முழுக்கவும் பணி செய்ய வேண்டும். இப்படித் தொடர்ந்து பல மணி நேரம் துாக்கம் இல்லாமல் பிரசவ வார்டு, அறுவைச்சிகிக்சை அறை, குழந்தை மருத்துவம் என பணியாற்ற வேண்டும்.

எப்படி ஒரு மனிதன் தொடர்ந்து 36 மணி நேரம் பணியாற்ற முடியும்? இவ்வாறு பணியாற்றும் போது, துாக்கக் கலக்கத்தில் தவறான மருந்து மாத்திரைகள் கொடுத்து விட்டால் என்னாவது?

சாராசரி, மனிதன் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் என்கிறது ஒரு மருத்துவ அறிக்கை.

துாக்கமின்மை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை அமெரிக்க அரசின் தேசிய இதய நுரையீரல், இரத்த நிறுவனம் என்.ஐ.எச் (NIH- National Heart Lung and blood institute) வெளியிட்டு உள்ளது. உறக்கம் அவசியம் அதில், 'உணவு, குடிநீர், சுவாசிப்பது போன்றே, மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது உறக்கம். பிற தேவைகளைப் போலவே, மனிதனின் வாழ்நாள் முழுக்கவும், துாக்கம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

'நல்ல ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் உறக்கம் மிகவும் அவசியம் தேவை' என்று குறிப்பிட்டுள்ளது.

'நல்ல உறக்கம் இல்லை எனில், இதய நோய், சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பக்கவாதம், உடல் பருமன் உள்ளிட்ட நாட்பட்ட உடல் நலப் பிரச்னைகள் உண்டாகும்.

'துாங்காமல் இருந்தால், மனநல பிரச்சினைகளுடன் இறப்புக்கான வாய்ப்பும் அதிகமாகும்' என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை.

நன்றாகப் படித்து நல்ல மருத்துவனாய் சமூகத்தில் பெயரெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒவ்வொரு மாணவரும் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பை தேர்வு செய்கின்றனர்.

ஆனால் அங்கே இப்படி வாரம் ஒரு முறை ஓய்வில்லாமல் 36 மணி நேரம் கொடுத்து இளம் மருத்துவர்களின் உயிரை வாங்குவது, எந்த விதத்தில் நியாயம்? இளம் மருத்துவர்களுக்கு மட்டும் அல்ல, முதுநிலை மாணவர்களுக்கும் இந்நிலைதான் என்று சொல்கிறார்கள் மருத்துவ மாணவர்கள்.

ஐ.டி. துறையில் தொடர்ந்து 12 மணி நேரம் வேலை கொடுத்தால், அடுத்த நாள் விடுமுறை கொடுக்கிறார்கள். ஆனால் மதிப்பு வாய்ந்த மருத்துவ மாணவர்களுக்கு அவ்வாறான வாய்ப்பு இல்லை.

'அடிமை சிக்கி விட்டான்' என்பது போலவே இருக்கிறது, மருத்துவ மாணவர்களை நடத்தும் விதம். அவர்களின் பயிற்சித் திறன் அதிகரிக்க வேண்டும் எனில் வேறு எவ்வகையிலேயும் வழி முறைகளை வகுத்துக் கொடுக்கலாம். 36 மணிநேரம் வேலை

அதை விடுத்து நிம்மதியாக தூங்கக் கூட விடாமல் பயிற்சி டாக்டர்களை துாக்கக் கலக்கத்திலேயே உலவ விடுவது எந்த விதத்தில் நியாயம்?

சாதாரண மனிதனுக்கு ஒரு பிரச்னை என்றால் மருத்துவரை நாடிச்செல்வர்.

ஆனால் மருத்துவர்களுக்கே ஒரு பிரச்னை என்று வரும்போது யாரிடம் போய் முறையிடுவர்? 36 மணிநேரம் வேலை வாங்குவது மனித உரிமை மீறல்களில் வருமா வராதா? இது சட்டப்படி குற்றமாகாதா? துறைத் தலைவர்களாக இருப்பவர்கள், டீன்கள் அனைவரும் இது போல் ஐந்தாண்டு அடிமாடாய் கஷ்டப்பட்டுதானே இந்நிலைக்கு வந்திருப்பர்? தாங்கள் பட்ட துன்பத்தை இளம் தலைமுறையினர் படக் கூடாது என்று யோசித்து, தங்கள் துறைக்கு அவர்கள் ஏதாவது ஒரு வழிமுறையை கொண்டு வரவேண்டும்.

அதுதான் எதிர்கால மருத்துவர்களுக்கு அவர்கள் செய்யும் நன்மையாக இருக்க முடியும்.

வேலை பார்க்கும் மருத்துவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், போராட்டம் மூலம் எதிர்ப்பை தெரிவித்து அதை வெளியுலக்கிற்கு கொண்டு வருகின்றனர்.

ஆனால் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இப்படி தங்களுக்கு ஒரு பிரச்னை இருப்பதை வெளியில் சொல்லவே பயப்படுகிறார்கள். சொன்னால் தங்கள் படிப்பிற்கு பாதகம் வந்து விடுமோ என்று நினைக்கின்றனர்.

எப்படியாவது கஷ்டப்பட்டு ஐந்தாம் ஆண்டை முடித்து விடலாம் என்று நினைக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுக்கவும் மருத்துவ மாணவர்களுக்கு இத்தகையப் பிரச்னை இருக்கிறது. நீட் தேர்வு

மருத்துவத் துறை மாணவர்கள் இளநிலை, முதுநிலை என முடிக்கவே எட்டாண்டுகள் ஆகின்றன. அதுவும் இல்லாமல் இப்போது எல்லாவற்றிற்கும் நீட் தேர்வு இருக்கிறது.

அதற்கு படிக்கவும் இடையில் அவர்கள் கூடுதலாய் ஆண்டுகளை செலவிடவேண்டி உள்ளது. அவர்கள் மருத்துவராய் நிமிர்ந்து நிற்க எப்படியும் முப்பது வயதை கடக்க நேர்ந்து விடுகிறது. வெளியில் இருந்து பார்த்தால் 'என் மகன், மகள் டாக்டர்' என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் உள்ளபடியே மருத்துவம் படிப்பவர்கள் முள்கிரீடம் சுமப்பவர்கள் தான்.

சில தினங்களுக்கு (கடந்த திங்கள் அன்று) முன் சென்னை கலைவாணர் அரங்கில் 'மக்கள் நல்வாழ்வுத் துறை' அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில், சென்னை மருத்துவக் கல்லுாரியின் 187 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

அதில் நிறைய கோல்டு மெடல் வாங்கிய வீரசிவபாலன் என்ற மாணவர் பேசியபோது, 'எங்களுக்கு சில நாட்களில் சூரிய அஸ்தமனமும் தெரியாது, உதயமும் தெரியாது' என்று குறிப்பிட்டார்.

அவர் சொன்னதை தியாக மனப்பான்மையுடன் டாக்டர்கள் பணியாற்ற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் பெருமையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

மனிதாபிமானமிக்கவர் அதே நேரத்தில், பயிற்சி டாக்டர்களை இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து வேலை வாங்குவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

'மக்கள் நல்வாழ்வுத் துறை' அமைச்சர், மனிதாபிமானமிக்கவர். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்.

அவர் கல்லுாரி டீன்களிடம் பேசி, பயிற்சி மருத்துவர்களின் நல்வாழ்வுக்காகவும் வழி செய்தால், பணி அழுத்தத்தால் உயிர் விடும் மாணவர்களின் பரிதாப நிலை தொடராது. இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான மாநிலமாகவும் தமிழகம் திகழும்

இ.எஸ்.லலிதாமதி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.