நாடு முழுவதும் அனைத்து இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் பொது கலந்தாய்வு நடத்த மத்திய சுகாதார துறை முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 7, 2023

நாடு முழுவதும் அனைத்து இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் பொது கலந்தாய்வு நடத்த மத்திய சுகாதார துறை முடிவு

Central Health Department has decided to hold public consultation for all undergraduate and postgraduate medical courses across the country நாடு முழுவதும் அனைத்து இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் பொது கலந்தாய்வு நடத்த மத்திய சுகாதார துறை முடிவு

சென்னை: நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் தேசிய அளவில் பொதுகலந்தாய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு மருத்துவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் (NEET-நீட்) தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகின்றன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியமும் (என்பிஇஎம்எஸ்), இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமையும் (என்டிஏ) நடத்துகின்றன.

நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள்,இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் முதுநிலை, இளநிலை படிப்புகளில் 100 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குழு (எம்சிசி) https://mcc.nic.in/#/home என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் நடத்துகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் எஞ்சிய 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.

மாநிலங்களுக்கு சுற்றறிக்கை இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை,முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தும் என்று அறிவித்து, கடந்த மார்ச் 13-ம் தேதியிட்ட சுற்றறிக்கை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குழு தலைவர் அதுல்கோயல் வெளியிட்ட அந்த சுற்றறிக்கையில், ‘அகில இந்திய அளவில் நடத்தப்படும் இந்த பொதுகலந்தாய்வு மாணவர் சேர்க்கையில், அந்தந்த மாநில அரசுகளின் இடஒதுக்கீடு, உள்இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும். எனவே, நடைமுறையில் உள்ளஇடஒதுக்கீட்டு விதிகளை மாநிலஅரசுகள் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். பொது கலந்தாய்வு மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளுக்கு மாநில அரசு சார்பில் ஒரு அதிகாரியை நியமிக்குமாறும். அவர்களது பெயர், செல்போன் எண்,இ-மெயில் உள்ளிட்ட விவரங்களை அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மத்திய சுகாதாரத் துறையின் இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களின் நலனை பாதிக்கும். சுகாதாரத் துறை செயலருடன் ஆலோசனை நடத்தி, இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத் துறையிடம் எடுத்துரைக்கப்படும்’’ என்றனர்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசு மருத்துவர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.