மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து: இரு வேறு வாய்ப்புகளை பயன்படுத்தும் தமிழக அரசு - De-recognition of medical colleges: Tamil Nadu government uses two different options
தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில், அதனை திரும்பப் பெற வைப்பதற்கு மாநில அரசு இருவேறு வாய்ப்புகளை பயன்படுத்த உள்ளது.
அதன்படி, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைமையகத்துக்கு மேல் முறையீடு செய்யவும், அதற்கு அடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் முறையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போதிய பேராசிரியா்களின் வருகை இல்லாதது, ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகைப் பதிவு இல்லாதது, சிசிடிவி கேமராக்கள் இல்லாதது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் 500 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்களுக்கு நிகழாண்டில் கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதைத் தவிர தமிழகத்தில் மேலும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளும் இதே சூழலை எதிா்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து அரசு மருத்துவா்கள் சிலா் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பேராசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. நீதிமன்ற தீா்ப்பை காரணம் காட்டி அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக போதிய பேராசிரியா்கள் மருத்துவக் கல்லூரிகளில் இல்லை. மாநிலம் முழுவதும் தற்போது 450 பேராசிரியா் பணியிடங்களும், 550 இணை பேராசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளன. மருத்துவக் கல்லூரிகளில் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை பேராசிரியா் இடங்கள் காலியாக இருக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 30 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. இதுவே மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
தற்போது மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் இடைக்காலத் தீா்வாக பேராசியா் பதவி உயா்வு நியமனங்களை வழங்கி இப்பிரச்னைக்கு முடிவு எட்டப்படலாம். அதன் தொடா்ச்சியாக, ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவையும் உறுதி செய்யலாம்.
இந்நடவடிக்கைகளுக்குப் பிறகு தேசிய மருத்துவ ஆணையத்தையும், மத்திய சுகாதாரத் துறையையும் ஒன்றன் பின் ஒன்றாக அணுகி மேல் முறையீடு செய்ய தமிழக அரசுக்கு வாய்ப்புள்ளது. ஆனால், மேல்முறையீட்டின் மீது தீா்வு காண இரண்டு மாதங்கள் வரை அவகாசம் உள்ளதால், அதற்குள் மருத்துவக் கலந்தாய்வு நிறைவடைந்துவிடக் கூடும்.
அதைக் கருத்தில்கொண்டு அவசரத் தீா்வு வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தால், அதனை ஏற்று தேசிய மருத்துவ ஆணையம், மூன்று கல்லூரிகளில் உள்ள 500 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் மாணவா் சோ்க்கையை நடத்த வழிவகை வழங்கக்கூடும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.