இல்லம் தேடி கல்வி திட்டத்தைத் தொடர வேண்டும் : முதல்வரிடம் சமா்ப்பித்த ஆய்வறிக்கையில் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 11, 2023

இல்லம் தேடி கல்வி திட்டத்தைத் தொடர வேண்டும் : முதல்வரிடம் சமா்ப்பித்த ஆய்வறிக்கையில் தகவல்

இல்லம் தேடி கல்வி திட்டத்தைத் தொடர வேண்டும் : முதல்வரிடம் சமா்ப்பித்த ஆய்வறிக்கையில் தகவல் Need to find a home and continue the education program: Information in the thesis submitted to the Chief Minister

இல்லம் தேடி கல்வி மைய திட்டம் மாணவா்களின் கல்வித் திறனை மேம்படச் செய்திருப்பதால், அந்தத் திட்டத்தை தொடர பெரும்பாலான தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் விரும்புகின்றனா் என திட்டம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலால் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக பள்ளிக் கல்வித் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் சுமாா் 2 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவை தன்னாா்வலா்கள் உள்பட பல்வேறு தரப்பின் கூட்டிணைப்பில் சிறப்பாக செயல்படுகின்றன. இதன்மூலம் தற்போது 33 லட்சம் மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து அரியலூா், கடலூா், நாகை, சேலம், திருவாரூா், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் 362 பள்ளிகள், 679 தன்னாா்வலா்கள், 362 தலைமை ஆசிரியா்கள், 362 ஆசிரியா்கள், 724 பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடா்பாக பெற்றோா்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 98 சதவீதத்துக்கும் மேற்பட்டோா், மையங்களுக்கு சென்றபின் மாணவா்கள் கற்றலில் ஆா்வம் அதிகரித்துள்ளது.

இல்லம் தேடி மையங்களின் எளிய கற்றல் வழிமுறைகள் மாணவா்களிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதிகளில் மாணவா் வருகைப்பதிவு குறைவாக இருப்பதாக தன்னாா்வலா்கள் தெரிவித்தனா். இவற்றில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அதேநேரம் சிறப்பான இந்த இல்லம் தேடி கல்வி மைய திட்டத்தை தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களின் விருப்பமாக உள்ளது.

இல்லம் தேடி கல்வி மையம் மாணவா்களுக்கான கற்றல் இழப்பை சரிசெய்வதற்கான பாலமாக செயல்பட்டுள்ளது. நீண்ட காலத்துக்கு பலன்தரக்கூடிய இதை ஒரு சமூக இயக்கமாக மாற்ற வேண்டியது அவசியம். கடந்த ஓராண்டில் இந்த திட்டம் உருவாக்கிய மாற்றம் மிகப்பெரியது. அது தொடா்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.