என்ன ஆனது ஜனவரி சம்பளம் மன உளைச்சலில் ஆசிரியர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 7, 2023

என்ன ஆனது ஜனவரி சம்பளம் மன உளைச்சலில் ஆசிரியர்கள்

'தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நேற்று வரை ஜனவரி சம்பளம் வரவில்லை. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்,'' என, விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் ச.மயில் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மாநிலத்தில் அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளிகள் 8 ஆயிரம் உள்ளன. இவற்றில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளிகளில் 150 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்கவையும் உள்ளன. இப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2022 டிச., 17க்கு பள்ளி நிர்வாகங்கள் மூலம் பில் உரிமை கோரப்பட்டவர்களுக்கு ஜனவரி சம்பளம் நேற்று வரை வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்டம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் உதவி பெறும் பள்ளி மூலம் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பள உரிமை கோரப்படும். ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டு கருவூலத்துறைக்கு செல்லும். அங்கிருந்து பண பரிமாற்றமாகி சம்பளமாக ஆசிரியர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 2022 டிச., 17 வரை பில் உரிமை கோரியவர்களுக்கு பண பரிமாற்றம் நடந்து சம்பளம் பெற்றுள்ளனர். அதற்கு பின் கோரியவர்களுக்கு சம்பளம் வரவில்லை. இணையத்தில் நிதி இருப்பு இல்லை என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு இதற்கென தனியாக நிதி ஒதுக்குகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள், உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கென தனித்தனி நிதி கணக்குகள் உள்ளன.

இப்பிரச்னை தொடக்க, நடுநிலைப்பள்ளி மட்டுமல்லாது மேல்நிலைப்பள்ளி, கல்லுாரி என உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

உயரதிகாரிகள் ஐ.எப்.எச்.எம்.எஸ்.,ஐ அப்டேட் செய்யும் போது தொழில்நுட்ப கோளாறால் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். வீட்டுக்கடன் மாதத்தவணை, தனிப்பட்ட மருத்துவ செலவுகளுக்கு பணமில்லாது ஆசிரியர்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதை விரைந்து சரி செய்ய பள்ளிக்கல்வி, நிதி, கருவூலத்துறைகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.