இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடு: பரிந்துரைகள் வழங்க குழு அமைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 14, 2023

இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடு: பரிந்துரைகள் வழங்க குழு அமைப்பு



இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடு: பரிந்துரைகள் வழங்க குழு அமைப்பு

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு பிரச்னை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளரின் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1.6.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியா் பணியில் நியமனம் பெற்றவா்கள் 1.6.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியா் பணியில் நியமனம் பெற்றவா்களுக்கு இணையான ஊதியம் வேண்டி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் வளாகத்தில் (டிபிஐ) கடந்த டிச.27-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரத்தில் ஆசிரியா் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடா்பாக வலியுறுத்தி போராடி வரும் ஆசிரியா்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித் துறை செயலாளா் (செலவினம்), பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா், தொடக்கக் கல்வி இயக்குநா் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து இந்தக் கோரிக்கை தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, தமிழக அரசின் நிதித் துறை செயலாளரை (செலவினம்) தலைவராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா், தொடக்கக் கல்வி இயக்குநா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழுவின் பணிகளுக்குத் தேவையான உதவிகள், குழுத் தலைவா், உறுப்பினா் தேவைக்கேற்ப கூட்டத்தை ஏற்பாடு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநா் கேட்டுக் கொள்ளப்படுகிறாா் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.