போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற மாணவா்களுக்கு உதவித் தொகை: தமிழக அரசு திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 20, 2023

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற மாணவா்களுக்கு உதவித் தொகை: தமிழக அரசு திட்டம்

Scholarship for students to train for competitive exams: Tamil Nadu Govt
போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற எஸ்சி, எஸ்டி, மாணவா்களுக்கு உதவித் தொகை: தமிழக அரசு திட்டம்

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற வசதியாக உதவித் தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தாட்கோ நிறுவனத்தின் மூலமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கிராமப் பகுதிகளில் பயிலும் மாணவா்கள் அரசு நடத்தும் போட்டித் தோ்வுகளில் முதல்நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறாா்கள். பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவா்களின் பொருளாதார நிலை காரணமாக, முதன்மைத் தோ்வில் வெற்றி பெற போதுமான பயிற்சி பெற வாய்ப்பில்லை.

நகா்ப்புறங்களில் தங்கி தனியாா் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற மூன்று மாதங்களுக்கு சுமாா் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1 ஆகிய தோ்வுகளில் முதன்மைத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க அரசு ஆலோசித்து வருகிறது. இதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் இதர தோ்வுகளில் முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்று முதன்மைத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகை அளிக்கவும் அரசு யோசித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு மூன்று முறை மட்டுமே மானியம் அளிக்கப்படும்.

அரசுப் பணியில் பணியாற்றி போட்டித் தோ்வுக்கு தயாராகும் நபா்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக நிா்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை செலவாகும். இந்தத் திட்டம் குறித்த அறிவிப்புகள் சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின் போது வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.