தமிழ்நாடு முழுவதும் மார்ச் 28ல் வேலை நிறுத்தப் போராட்டம் - அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு Strike strike on March 28 across Tamil Nadu - Government Employees Union Announcement
மார்ச் 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில், அதன் செயற்குழு கூட்டம், மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அன்பரசன், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை, கடந்த அதிமுக அரசு நிராகரித்ததாகவும், தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைத்த திமுக அரசும், இதுவரை தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுதல், முடக்கப்பட்ட சரண்டர் தொகையை விடுவித்தல், அகவிலைப்படி வழங்குதல், சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊர்புற நூலகர்கள், வருவாய் கிராம உதவியாளர் உள்ளிட்ட 3 லட்சம் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புதல், மத்திய அரசின் 20 மாத நிலுவை ஊதியத்தை வழங்குதல், சாலை பணியாளர்களுக்கு 41 மாதத்தை வேலை மாதமாக ஏற்றல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம் பல முன்னெடுப்புகளைச் செய்தும், தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, 6 முறை சந்தித்தும், தங்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக மட்டுமே தெரிவிப்பதால், வரும் மார்ச் மாதம் 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும், அதனையும் கண்டுகொள்ளாதபட்சத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, கோட்டை முற்றுகைப் போராட்டமும் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.