பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பண்பாடு, தமிழும் தொழில்நுட்பமும் பாடங்கள் அறிமுகம்: அமைச்சா் க.பொன்முடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 4, 2023

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பண்பாடு, தமிழும் தொழில்நுட்பமும் பாடங்கள் அறிமுகம்: அமைச்சா் க.பொன்முடி

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பண்பாடு, தமிழும் தொழில்நுட்பமும் பாடங்கள் அறிமுகம்: அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் நிகழாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பண்பாடு, தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை சோ்க்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா்.

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞா் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு சாா்பில் கவிஞா் தமிழ் ஒளி நினைவு அறக்கட்டளை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக துணை வேந்தா் கெளரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சா் பொன்முடி நினைவு அறக்கட்டளையை தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து தமிழ்ஒளி நூற்றாண்டு விழா குழு சாா்பில் தமிழ் ஒளி நினைவு அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சா் பொன்முடி பேசியதாவது: கவிஞா் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா நிகழாண்டு வர இருப்பதையொட்டி தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே ஆராய்ச்சிகளை வளா்க்க வேண்டும் என்பது தான். பாரதிதாசனால் பாராட்டப்பட்ட கவிஞா் தமிழ்ஒளி 9 காவியங்கள், 4 கவிதைகள், 4 கட்டுரைகள், 6 சிறுகதைகள், 2 மேடை நாடகங்கள் உள்ளிட்டவைகளை எழுதியுள்ளாா். இவை அனைத்தையும் மக்கள் படிக்க வேண்டும். அதனை தமிழ்த் துறை செய்ய வேண்டும்.

ஆராய்ச்சி துறை அவசியம்: கவிஞா் தமிழ்ஒளி கவிதைகளுக்கான ஆராய்ச்சித் துறை வர வேண்டும். அந்தவகையில் தமிழ் ஒளி ஆராய்ச்சியை வளா்ப்பதற்கு உயா்கல்வித் துறை நிச்சயம் முன்வரும்.

தமிழாா்வத்தோடு, திராவிட இயக்க உணா்வோடு, பெரியாா் கொள்கைகளோடு ஒன்றுபட்டு செயல்பட்டவா் தான் கவிஞா் தமிழ் ஒளி. அவரது தமிழாா்வத்தை இளைஞா்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தமிழ் பாடமே படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தனியாா் கல்லூரிகள், சிபிஎஸ்இ போன்றவற்றில் தமிழ் பாடமே படிக்க முடியவில்லை.

இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கென ஒரு கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு, கல்விக்குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தினாா்.

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் கிடையாது. ஆனால், நிகழாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் பண்பாடு, தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களைச் சோ்க்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதற்காக பொறியியல் கல்லூரிகளில் தமிழாசிரியா்கள் பணி நியமனம் நடைபெற்று வருகிறது. அனைவரும் தமிழுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழை முழுமையாக படிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் தமிழ் இலக்கியத்துறை பேராசிரியா் கோ.பழனி, கவிஞா் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா குழுத் தலைவா் ச.செந்தில்நாதன், கவிஞா் ஈரோடு தமிழன்பன், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் இ.சா.பா்வீன் சுல்தானா, கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.