சர்வதேச புத்தக கண்காட்சி தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 2, 2023

சர்வதேச புத்தக கண்காட்சி தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னையில் 16ம் தேதி தொடங்க உள்ள சர்வதேச புத்தக கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் வாரியத்துக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை சர்வதேச புத்தகக் கண்காட்சி நடக்க இருக்கிறது. அதில் பள்ளிக் கல்வித்துறை, பொது நூலகத்துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் வாரியம் ஆகியவை இணைந்து புத்தகங்கள் காட்சிப்படுத்த உள்ளன. அதற்காக தமிழக அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை:

சென்னையில் நடக்க உள்ள சர்வதேச புத்தக கண்காட்சியில் பங்கேற்பதற்காக பொது நூலகத்துறை இயக்ககம் சார்பில் பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், அஸர்பைஜான், இந்தோனேசியா, கனடா, இஸ்ரேல், போர்ச்சுகல், ஜார்ஜியா, கென்யா, உகாண்டா, தான்சானியா, அர்மேனியா, பங்களாதேஷ், பிரான்சு, இத்தாலி, ஸ்வீடன், கஜகஸ்தான், கிரச் ரிபப்ளிக், மற்றும் கேரளா மாநிலம் ஆகியவை இந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. மேற்கண்டு நாடுகளை சேர்ந்த வல்லுநர்கள், மொழி ஆய்வாளர்கள், வரலாறு, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆய்வாளர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுவதுடன், பதிப்பகங்களுடன் கலந்துரையாட உள்ளனர்.

அதனால், மேற்கண்ட கண்காட்சி அரங்குகளில் சர்வ தேச அளவில் வசதிகளை மேற்கொள்ளவும், உணவு, தங்குமிடம், உள்ளிட்ட வசதிகளை செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் செலவினங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை பொது நூலகத்துறையில் நடந்தது. அதன் பேரில் ரூ.6 கோடி தேவைப்படுவதாக பொது நூலகத்துறை இயக்குநர், அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் கடிதத்தை பரிசீலித்த அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் வாரியத்துக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.