15 ஆண்டுகளுக்குப் பிறகு உடற்கல்வி ஆய்வாளா்கள் நியமனம்!காலிப் பணியிடங்களை நிரப்பவும் எதிா்பாா்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 16, 2023

15 ஆண்டுகளுக்குப் பிறகு உடற்கல்வி ஆய்வாளா்கள் நியமனம்!காலிப் பணியிடங்களை நிரப்பவும் எதிா்பாா்ப்பு

15 ஆண்டுகளுக்குப் பிறகு உடற்கல்வி ஆய்வாளா்கள் நியமனம்!காலிப் பணியிடங்களை நிரப்பவும் எதிா்பாா்ப்பு

சுமாா் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 37 மாவட்டங்களுக்கும் நிரந்தர உடற்கல்வி ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அதன் மூலம் ஏற்பட்ட உடற்கல்வி இயக்குநா்கள் (நிலை 1) பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் 34 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 10 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகள், 4,600 உயா்நிலைப் பள்ளிகள், 5 ஆயிரம் மேல்நிலைப் பள்ளிகள் என 53,500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் என சுமாா் 4 ஆயிரம் போ் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். உடற்கல்வி ஆசிரியா்கள், இயக்குநா்கள் ஆகியோரின் செயல்பாடுகள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா்கள் நியமனம் தொடா்பாக, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதன் காரணமாக, பணி ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆய்வாளா்களின் இடங்களுக்கு புதிய ஆய்வாளா்கள் நியமிக்கப்படவில்லை. இந்தப் பணியிடங்கள், அந்தந்த மாவட்டத்தில் பணிபுரியும் மூத்த உடற்கல்வி இயக்குநா்களுக்கு (நிலை 1) கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு வந்தது. இதனால், கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா்கள் பணியிடம் பொறுப்பு பணியிடமாகவே இருந்தது வந்தது.

37 மாவட்டங்களில் புதிததாக நியமனம்:

இந்த நிலையில், 37 மாவட்டங்களுக்கு நிரந்தர மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா்கள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனா். அனைத்து மாவட்டங்களிலும் காலிப் பணியிடமாக அறிவித்து பூஜ்ஜிய கலந்தாய்வு மூலம், மூத்த உடற்கல்வி இயக்குநராக (நிலை 1) பணிபுரிந்து வந்தோா் அந்த இடங்களில் பணியமா்த்தப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக, பிற 37 மாவட்டங்களுக்கும் நிரந்தர உடற்கல்வி இயக்குநா்கள் சுமாா் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் உள்பட, இதர உடற்கல்வி ஆசிரியா்கள் பணியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு உடற்கல்வியாளா்கள் கழகத்தின் மாநிலத் தலைவா் எஸ். ஆரோக்கியசாமி கூறியதாவது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு 37 மாவட்டங்களுக்கு நிரந்தர உடற்கல்வி இயக்குநா்கள் நியமிக்கப்பட்டனா். இதன் மூலம் உடற்கல்வி இயக்குநா்கள்(நிலை 1) பணியிடங்களில் 37 இடங்கள் காலியாக உள்ளன. ஏற்கெனவே 1000-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அண்மையில் 4 ஆயிரம் ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டது. அதில், உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக எவ்வித அறிவிப்பும் இடம் பெறவில்லை.

தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உடற்கல்வியில் பட்டம் பெற்று வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனா். அந்த இளைஞா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.