தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – அரசாணை வெளியீடு (ஆண்டு: 2018) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 29, 2022

தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – அரசாணை வெளியீடு (ஆண்டு: 2018)

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்விவாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித்தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை:-

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009ன் பிரிவு 23 (1) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் (NCTE) வழிகாட்டுதலின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக தகுதி பெறுவதற்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதற்கான முகவாண்மையாக ஆசிரியர் தேர்வு வாரியம் நியமிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.

2.மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்ணிற்கு 60 விழுக்காடு, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிநாடுநர்கள் பெற்ற கல்வித் தகுதிக்கான மதிப்பெண்களுக்கு 40 விழுக்காடு என வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்பட்டு 100 விழுக்காட்டிற்கு பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இன சுழற்ச்சி முறை அடிப்படையிலும் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய வழிமுறைகள் செய்யப்பட்டது. மேலும், இவ்வாறு பணிநாடுநர்களின் கல்வித்தகுதிக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதற்கும் அவர்களது கல்வித்தகுதிக்கு அவர்களின் உள்ளபடியான மதிப்பெண் விழுக்காட்டின் அடிப்படையில் கணக்கிட திருத்திய வழிமுறைகள் மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்டது. 3. மேற்தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், 04.06.2018 அன்று நடைபெற்ற தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வாரியத்தால் பின்வரும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது:-

"குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teachers Eligibility Test) தேர்ச்சி பெற்றவர்களையே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இந்தத் தேர்வைப் பொறுத்தவரை ஆசிரியர்களின் பணிநியமனத்திற்கான தகுதியினை நிர்ணயிக்கும் ஒரு தேர்வாக மட்டுமே, (Qualifying Examination) இந்தத் தேர்வு அமைந்துள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (Teachers Eligibility Test) நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்தத் தேர்வில் அதிக தரம் பெற்ற பணிநாடுநர்களே காலிப் பணியிட எண்ணிக்கையின் அடிப்படையில் இனவாரி சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் பணிக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இம்முறையை பின்பற்றும்பொழுது ஆசிரியர் தகுதித்தேர்வில் (Teachers Eligibility Test) தேர்ச்சி பெற்ற இதர பணி நாடுநர்கள் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வேண்டி கோரிக்கையை வைக்கின்ற தேவையற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையினைக் களைய வேண்டுமெனில் ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளது போல, ஆசிரியர் தகுதித் தேர்வு (Teachers Eligibility Test) என்பது ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிக்கும் தனித் தேர்வாகவும், பின்பு அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதற்கென தனியாக போட்டித் தேர்வு (Competitive Exam) ஒன்றை நடத்தி அதனடிப்படையில் அரசுப்பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்குத் தேவையான ஆசிரியர்களை தெரிவு செய்யும் முறையைப் பின்பற்றலாம்.போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர் பணி நாடுநர்கள், கட்டாயமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விண்ணப்பங்களைக் கோரலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது."

4. ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் பணிநாடுநர்களுக்கான போட்டித் தேர்வினை தனித்தனியாக நடத்துவது குறித்த தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் அளித்த பரிந்துரை குறித்து பின்வரும் விவரங்கள் கருதிப்பார்க்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியராக நியமனம் பெறுவதற்கான தகுதித்தேர்வாக மட்டுமே உள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச மதிப்பெண் பெற்றாலே போதும் இந்நிலையில், அரசு பள்ளியில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்னுடன் பணி நாடுநர்கள் கல்விச் சான்றிதழின் படி பெற்ற மதிப்பெண்ணிற்கு ஈடாக வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதனடிப்படையில் அதிக தரம் பெற்ற பணிநாடுநர்கள் இனசுழற்சி அடிப்படையில் தெரிவு செய்ய உத்தேசிக்கப்பட்டது. இவ்வாறு ஆசிரியர் தகுதித் தேர்வுடன் வெயிட்டேஜ் மதிப்பீட்டு முறை பின்பற்றுவதன் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னர் தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்களின் கல்வித் தகுதிக்கான மதிப்பெண் தற்போது தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணுடன் ஒப்பிடுகையில் அவர்களது வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் வேறுபாடுகள் காணப்பட்டு சமன்பாடு இல்லாத நிலை ஏற்படலாம் என தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

ii. மேலும், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் நியமனத்திற்கான போட்டித் தேர்வு தனித்தனியாக நடத்தப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி ஏழு ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது என்ற நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுடன் வெயிட்டேஜ் முறையில் கல்வித்தகுதிக்கான மதிப்பெண் கணக்கீட்டு அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்படுவதால் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்சிப் பெற்ற பணி நாடுநர்கள் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெறுவதற்கு தங்களது மதிப்பெண்னை மேம்படுத்துவதற்காக மீண்டும் மீண்டும் தேர்வு எழுத நேரிடுகிறது. இதனால் தேர்வு எழுதும் பணி நாடுநர்களுக்கு பெருத்த சிரமம் ஏற்படுகிறது. இவ்வாறு ஆசிரியர் தகுதித் தேர்வுடன் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதில் ஒவ்வொரு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், தரவரிசைப் பட்டியல் (Merit List) தயாரிக்கும் பணி மற்றும் இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப்பணி மற்றும் தரவுகளை பராமரிப்பதிலும் இடர்பாடுகள் ஏற்படுகிறது. iv. ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கீட்டின் படி ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, ஆசிரியர் பணி நியமனம் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு பணி நாடுநர்கள் மத்தியில் ஏற்படுகிறது.

5. மேற்தெரிவிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய பரிந்துறைகள் சார்ந்து, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் துறைத்தலைவர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் 14.06.2018 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது:-

"தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரையினை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வினை தனியாகவும், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தெரிவிற்கான போட்டித் தேர்வினை தனியாகவும் நடத்தலாம். அவ்வாறு போட்டித் தேர்வு எழுதுவதற்கு பணி நாடுநர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியுற்றவராக இருத்தல் அவசியம்."

6.மேற்காணும் சூழ்நிலையில் இந்நேர்வில் தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் அளித்த பரிந்துரை மற்றும் அதன்மீது மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றை அரசு கவனமாக ஆய்வு செய்து, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) என்பது பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித்தேர்வாகவும் (Qualifying Examination), அரசுப்பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவுசெய்வதற்கு உரிய கல்வித்தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று, போட்டித் தேர்வினை (Competitive Examinantion) தனியாக ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தி பணிநியமனம் குறித்த உரிய நெறிமுறைகளை பின்பற்றி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்யும் முறையினை பின்பற்றலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.