தமிழ் வளர்ச்சித் துறை செய்தி வெளியீடு - Tamil Development Department - On Tamil Nadu Day celebration on 18th July 2022 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 16, 2022

தமிழ் வளர்ச்சித் துறை செய்தி வெளியீடு - Tamil Development Department - On Tamil Nadu Day celebration on 18th July 2022 - PDF

செய்தி வெளியீடு எண்: 1198

நாள்: 16.07.2022

செய்தி வெளியீடு

தமிழ் வளர்ச்சித் துறை

தாய்த்தமிழ் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (1967) ஆம் நாளையே தமிழ்நாடு திருநாளாக இனி கொண்டாடப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ( அறிவிப்பு எண். 988) அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு திருநாள் விழா 18.07.2022 திங்கட்கிழமையன்று காலை 9.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விருதுகள் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார். தமிழ்நாடு திருநாள் விழாவில் நடைபெறும் கருத்தரங்கில் மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் கருத்தரங்கத்திற்கு தலைமையேற்றும், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் தமிழ்நாடு உருவான வரலாறு என்ற தலைப்பிலும், திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் மொழிவாரி மாகாணமும், தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும் என்ற தலைப்பிலும், திரு. வாலாசா வல்லவன் அவர்கள் தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள் என்ற தலைப்பிலும், முனைவர் ம. இராசேந்திரன் அவர்கள் தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டிய தனயன் என்ற தலைப்பிலும், மருத்துவர் நா. எழிலன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றவுள்ளனர்.

2021 ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருது பெறும் திரு. கு. சின்னப்ப பாரதி (சார்பாக அவரது குடும்பத்தினர்), திரு. கோணங்கி, திரு. இரா. கலியபெருமாள் ஆகியோர்களுக்கு விருதுத்தொகையாக உரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையும், தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சிறப்பிக்கப்படவுள்ளனர். மேலும், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது பெறும் திரு. கயல் (கோ) தினகரன், கபிலர் விருது பெறும் பாவலர் கருமலைத் தமிழாழன் (எ) கி. நரேந்திரன். உ.வே.சா விருது பெறும் மருத்துவர் இரா. கலைக்கோவன், அம்மா இலக்கிய விருது பெறும் முனைவர் மு. சற்குணவதி காரைக்கால் அம்மையார் விருது பெறும் முனைவர் இரா. திலகவதி சண்முகசுந்தரம் ஆகியோருக்கு இரண்டு இலட்சம் உரூபாய்க்கான காசோலையும் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கி பொன்னாடையும் அணிவித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சிறப்பு செய்யப்படவுள்ளனர். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடுநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடத்தப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு ரூ.50,000/- பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி பா. தயாழினி, இரண்டாம் பரிசு ரூ.30,000/- பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி சொ. துர்கா, மூன்றாம் பரிசு ரூ.20,000/- பெற்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி தி. யோக பிரியா, பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ரூ.50,000/- பெற்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி சு. நறுமுகை, இரண்டாம் பரிசு ரூ.30.000/- பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் இர. பிரபாகரன், மூன்றாம் பரிசு ரூ.20,000/- பெற்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி செ. ஸ்ருதிகா ஆகியோருக்கு காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளன.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசு வழங்கும் 8 விருதுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார்கள். இவ்விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கி விழாப்பேருரையும், மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையுரையும், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் முன்னிலையுரையும் ஆற்றவுள்ளனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள் வரவேற்புரையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. மகேசன் காசிராஜன் இ.ஆ.ப. அவர்கள் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், செய்தித் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன். இஆப. அவர்கள், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.