2 நாட்கள் பள்ளி விடுமுறை..144 தடை உத்தரவு..பதற்றத்தில் மக்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 29, 2022

2 நாட்கள் பள்ளி விடுமுறை..144 தடை உத்தரவு..பதற்றத்தில் மக்கள்

கர்நாடகாவில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்லரி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் நட்டார். இவர் பாஜக நிர்வாகி ஆவார். இவர் கடந்த செவ்வாய்கிழமை அன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சாக்கீர் (வயது 29), சஃபிக்யூ (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ ஆகிய அமைப்புகளை சேர்ந்த 21 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு மேலும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்மாவட்டத்தின் சூரத்கல் மங்கல்பெட் பகுதியை சேர்ந்த முகமது பைசல் என்ற இளைஞரை நேற்று இரவு 8 மணியளவில் முகமூடி அணிந்து வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த முகமது பைசல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து சூரத்கல், முல்கி, பனம்பூர், பஜ்பி உள்ளிட்ட நகரங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதால், வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். தக்‌ஷின கன்னட மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரள எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார். இதனால் அங்குள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு உள்ளது. கர்நாடகா - கேரள எல்லை உட்பட 19 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 10 மணிக்குப் பின் வெளியே யாரும் நடமாடக் கூடாது என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், காசர்கோடு எல்லையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாளப்பாடியில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. காசர்கோடு மட்டுமின்றி, வயநாடு, கண்ணூர் எல்லைப் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய புலனாய்வு முகாமை இது குறித்து விசாரிக்க மங்களூர் வருவதால், மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.