ரூ.1.43 கோடி செலவழித்து 'மொக்கை' பயிற்சி; பள்ளிக்கல்வி துறை மீது ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 19, 2022

ரூ.1.43 கோடி செலவழித்து 'மொக்கை' பயிற்சி; பள்ளிக்கல்வி துறை மீது ஆசிரியர்கள் அதிருப்தி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி என்ற பெயரில், 1.43 கோடி ரூபாய் செலவில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட, 'யு டியூப்' வீடியோ நிகழ்ச்சியால், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டாகவே, பள்ளிக்கல்வித் துறை பல்வேறு சர்ச்சைகளுடன் நகர்ந்து வருகிறது.மாணவர்களிடையே ஜாதி பிரச்னை, பாலியல் பிரச்னை, மது குடித்து தகராறு, ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, போராட்டம், ஆர்ப்பாட்டம், வகுப்பு, பணி புறக்கணிப்பு தினசரி நிகழ்வாக உள்ளது.புதிய கல்வி ஆண்டிலாவது இந்த நிலைமை மாறும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கு மாறாக துறையின் செயல்பாடுகள் நடந்து வருகின்றன.கடந்த, 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பின், முதல் சனிக்கிழமையான நேற்று முன்தினம், மாநிலம் முழுதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க அமைக்கப்பட்ட கணினி அறைகளில், ஆசிரியர்கள் கூட்டமாக அமர வைக்கப்பட்டனர்.

காலை, 10:00 மணிக்கு, 'புரஜக்டர்' வழியே அங்கிருந்த திரைகளில், யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பு வீடியோ காட்டப்பட்டது. அதில், பள்ளிக்கல்வி துறை ஊழியர் ஒருவர் பேச துவங்கினார்; அவர் பேசிக் கொண்டே இருந்ததால், நண்பகல் தாண்டி விட்டது.அவர் பேசியது எதுவும் புரியாமல் சோர்வடைந்த ஆசிரியர்கள், இடைவேளைக்கு பின் மீண்டும் இருக்கையில் அமர்ந்தனர். பின், மீண்டும் இருவர் பேசினர். ஆசிரியர்கள் அதையும் களைப்புடன் பார்த்தனர்.மாலை, 4:30 மணிக்கு பயிற்சி முடிந்தது என கூறியதும், நிகழ்ச்சி குறித்த கருத்தை, செயல்படாத செயலி ஒன்றில் பதிவு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அந்த செயலி சரியாக இயங்காததால், சிலர் கருத்தை பதிவு செய்தும், செய்யாமலும் அங்கிருந்து மிகுந்த களைப்புடன் வீடு திரும்பினர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'வகுப்பறையில் ஒன்றாக அமர வைத்து, ஏதோ வீடியோ காட்டினர்; அதில் மாணவர்களுக்கான கல்வி குறித்த அம்சம் எதுவும் இல்லை. கடமைக்கு சென்றோம்; பங்கேற்றோம்; வீடு திரும்பினோம். சம்பளம், 'கட்' ஆகாமல் இருக்க, வருகைப்பதிவு கிடைத்து விட்டது' என்றனர்

.இந்த நிகழ்ச்சிக்கு, 1.43 கோடி ரூபாய் செலவிட்டதாக, பள்ளி கல்வித்துறையில் கணக்கு காட்டப்பட்டுள்ளது.இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரும் வாரங்களிலும் நடத்தப்படும் என, ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமைகளில் விடுப்பு எடுக்க, பலரும் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.