தோல்வியில் கலங்கேல் - தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 19, 2022

தோல்வியில் கலங்கேல் - தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள்!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு ஜூன் 20 (இன்று) வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவு வெளியானதும் வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுவதையும் தோல்வி அடைந்தவர்கள் மனச்சோர்வுடன் முடங்கிக் கிடப்பதையும் பார்க்கிறோம்.



வெற்றி பெற்றவர்களின் கொண்டாட்டம் தவறில்லை. ஆனால் தோல்வி அடைந்தவர்கள் முடங்கிக்கிடக்க வேண்டுமா? ஒருவருக்கு தோல்வி ஏற்படுத்தும் சோர்வைவிட மற்றவர்களால் ஏற்படும் அழுத்தமே கூடுதல் சோர்வை அளிக்கிறது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.

தேர்வில் தோல்வி தரும் வலியைவிட பெற்றோர் திட்டுவது, குறை கூறுவது, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது ஆகியவையே இன்றைய பிள்ளைகளை பெரும் மனவருத்தம் கொள்ளச் செய்கின்றன.



தேர்வு முடிவு என்பது எந்த விதத்திலும் ஒரு மனிதனுடைய வாழ்வின் வெற்றியோ தோல்வியையோ முடிவு செய்வதில்லை. இந்த உலகில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே பலமுறை தோல்வி அடைத்தவர்கள்தான். அவர்கள் தோல்விக்கு மதிப்பளித்தார்கள்.தோல்விகளை ஏற்றுக்கொண்டார்கள். அதன் மூலம் பாடம் கற்றுக் கொண்டார்கள். அவர்கள் தோல்விகளால் ஒருபோதும் துவண்டு போனது இல்லை.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா? மன உறுதியுடன் ஒருசில வாரங்களில் வரும் சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ மாணவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுதி வெற்றி பெற்று உயர்கல்வி பயில்கிறார்கள் என்பதை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



மதிப்பெண் குறைந்து விட்டதால், பிள்ளைகளை திட்டுவதாலோ குறை சொல்வதலோ எந்தவித பயனும் இல்லை என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அல்லது மதிப்பெண் குறைந்தாலும் உங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்து அடுத்து என்ன செய்யலாம் என்று கல்வியாளர்களிடம் அறிவுரை கேளுங்கள்.



பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே தங்கள் குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கும் மனவலிமையை உருவாக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளை திட்டுவதாலும் குறை கூறுவதாலும் அவர்களுக்கு தோல்வி பற்றிய பயம் அதிகரிக்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.



இளைஞர் ஒருவர், தினமும் கல்லூரிக்குச் செல்லும்போது ஷூ லேஸ் கட்டுவதற்கு சிரமபட்டார். அன்றாடம் செய்யக்கூடிய சாதாரண வேலைக்கு தனது மகன் சிரமப்படுவதை கவனித்த அவரது தந்தை, அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு "உங்கள் மகனை நரம்பு குறைபாடு தொடர்பான கொடிய நோய் தாக்கி உள்ளது. உடல் தசைகளை பாதிக்கக்கூடிய இந்த நோய் உடலிலுள்ள ஒவ்வொரு பாகத்தையும் பாதித்து, இரண்டு ஆண்டில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' என்று தெரிவித்தார்.



அதை கேட்டு கொண்டிருத்த அந்த இளைஞர் சிறிதும் அச்சமின்றி "இந்த நோய் எனது உடலை பாதிக்கும். ஆனால், எனது மூளையை பாதிக்குமா' என்று கேட்டார். அதற்கு மருத்துவர் "மூளையை நிச்சயமாக பாதிக்காது' என்றார். உடனே அந்த இளைஞர், "என்னுடைய இயற்பியல் ஆராய்ச்சியை என் உடலா செய்யப்போகிறது? எனது மூளைதான்ஆராய்ச்சிக்கு உதவ போகிறது' என்றார் தன்னம்பிக்கையுடன்.



ஆனாலும் ஒரு சில ஆண்டுகளில் நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அத்தனை உறுப்புகளும் செயலிழந்து கொண்டிருக்க, இரண்டு விரல்கள் மட்டும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருந்தன.



அப்போதும் தனது தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. இரண்டு விரல்கள் மூலமாக கணினி உதவியுடன் தனது கருத்துகளை பரிமாறிக் கொண்டார். நவீன அறிவியல் பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுகளை புத்தகங்களாக வெளியிட்டார். மக்களிடம் அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிட்டியது.

இரண்டே ஆண்டில் இறந்து விடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட அந்த மனிதர் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தனது மன உறுதியின் மேல் நம்பிக்கை கொண்டிருத்ததே. அவர்தான் நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்.



காலத்தை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் மனித குலத்துக்கு அளித்த பாடம், போராடு, தோல்வியை தூக்கி எறி, தொடர்ந்து முயற்சி செய், வெற்றியை அடைவாய் என்பதுதான்.



தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள். உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய, உற்சாகப்படுத்தக்கூடிய நேர்மறையாளர்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்; எதிர்மறை சிந்தனையாளர்களைத் தவிர்த்துவிடுங்கள்.



பெற்றோரே! உங்கள் பிள்ளைகளின் மீது நம்பிக்கை இழக்காதீர்கள். அவர்களது ஆர்வத்தையும், விருப்பத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு விருப்பப்பட்ட துறையில் அவர்களை ஈடுபடுத்துங்கள். தேர்வு முடிவு வாழ்வின் முடிவல்ல, அது வாழ்வின் ஆரம்பமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளுக்கும் புரிய வைத்திடுங்கள்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.