இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 23, 2022

இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடந்தது. முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகோபால், மதுரை கலெக்டர் அனிஷ்சேகர், முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக இந்த பயிற்சி முகாமில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் மதிப்பெண்களை கண்டு மனம் தளரக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமைகள் உண்டு. மதிப்பெண் குறைந்த மாணவ-மாணவிகள் தோல்வியடைந்து விட்டோம் என்ற விரக்தி அடையாமல் அடுத்த கட்ட தேர்வில் வெற்றி பெற்று தனித்திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜூலை மாதமே மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு தடையில்லாமல் உயர்கல்வியை மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்துள்ளோம். தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்கள் தோல்வி என்ற எண்ணத்தை மாற்றி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக பெற்றோர்களும் மற்ற மாணவர்களுடன் குழந்தைகளை ஒப்பிடக்கூடாது. ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி தனித்திறமைகளை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கட்டடங்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2500 பள்ளிகளில் மரத்தடி வகுப்புகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. வருகிற ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் இவைகள் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் கலந்து பேசி அதற்கான நிதி ஒதுக்கீடு பெற்று தரப்படும்‌. அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலி பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது 9474 காலிபணி இடங்கள் உள்ளன. தற்போது ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையும் கருத்தில் கொண்டு அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட 10 உபகரணங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். இதற்கு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வித்திறனை மேம்படுத்த முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையை விட நமது மாநிலத்தில் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.