அரியலூர் - திருமானூர் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 21, 2022

அரியலூர் - திருமானூர் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை

அரியலூர் - திருமானூர் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில் அதிருப்தி காரணமாக, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சகாதேவன் - வனிதா தம்பதியினர். இவர்களது 17 வயது மகள் அபினா. இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். நேற்று பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அபினா 600-க்கு 397 மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வு முடிவுகளை பார்த்ததிலிருந்து அபினா குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறி புலம்பியுள்ளார். மேலும், இதனால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 21) மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த பெற்றோர்கள் வீட்டுக்கு வந்தபோது, மகள் தூர்க்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கதறி அழுதனர்.

இது குறித்து தகவலறிந்த வெங்கனூர் போலீஸார் மாணவியின் உடலை மீட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்பு கொண்டு பேசலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.