மாணவிகளுக்கு ரூ.1000 உயர் கல்வி உதவிதொகை வழங்க ஏற்பாடு தயார்: அமைச்சர் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 15, 2022

மாணவிகளுக்கு ரூ.1000 உயர் கல்வி உதவிதொகை வழங்க ஏற்பாடு தயார்: அமைச்சர் தகவல்

முதல்வர் மு.கஸ்டாலின் அறிவித்த மாணவியருக்கான உயர்கல்வி உதவித் தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவியரிடையே, கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. முதியோரை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுக்காக தனிக்கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது வெளியிடப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் முதியோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலை நோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை. தனியாக இருப்பது முதியோருக்கு பாதுகாப்பில்லை என்பதால் முதியோர் இல்லங்களை தேடி பலர் வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். மாணவியருக்கு உயர்கல்வி உறுதித் தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டவுடன் உறுதித் தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்படும்.

முதியோர் உதவித் தொகை வழங்கும் பணி இனி விரைவு படுத்தப்படும், தாமதம் இருக்காது. காலை சிற்றுண்டி திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடந்துவருகிறது. விரைவில் திட்டம் தொடங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணியும் நடக்கிறது. விரைவில் அவற்றை வழங்குவோம்.

18 வயதை கடந்த சிலர் காதல் திருமணம் செய்வதும் குழந்தை திருமணம் என்றுதான் கருதப்படும். அதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நிலைமை மாறும், காதல் திருமண எண்ணிக்கை குறையும்.

சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை. தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனம் உள்ளது. விலைப் பட்டியலைப் பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும். சத்துணவு பணியாளர் நியமனம் வெளிப்படைத் தன்மையடன் நடக்கும். அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி நடத்துவது குறித்து தெளிவான விளக்கத்தை கல்வித்துறை கொடுத்துவிட்டது. சமூக நலத்துறை சார்பில் எல்கேஜி, யுகேஜி நடத்தவில்லை. இவ்வாறு கீதாஜீவன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.