TNPSC உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு 23ம் தேதி முதல் பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 19, 2022

TNPSC உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு 23ம் தேதி முதல் பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் டின்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு வரும் 23ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: டின்.பி.எஸ்.சி குரூப் IV தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் உள்ள போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி மையங்களில் 500 மற்றும் 300 தேர்வர்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். தேர்வர்கள் சேர்க்கைக்காக இணைய வழியாக ஏப்.27ம் தேதி முதல் கடந்த 11ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இதன் மூலம் 2096 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்பயிற்சிக்கு, தேர்வு செய்யப்பட்டது தொடர்பான விபரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டோருக்கு அழைப்புக் கடிதங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட அழைப்புக் கடிதத்தினை திவிறக்கம் செய்து அந்தந்த பயிற்சி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவசியம் எடுத்துவர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை குறித்த நாள், நேரம் ஆகியன அழைப்பு கடிதங்களில் வழங்கப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் அஞ்சல் வழி மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும், போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் தயாராகும் வகையிலும் டின்.பி.எஸ்.சி குரூப் IV தேர்வுக்கு ஒரு நாள் ஊக்க முகாம் நடைபெற உள்ளது. மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியிலிருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டும், அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டும் டின்.பி.எஸ்.சி குரூப் IV-க்கு பயிற்றுவிக்கப்பட உள்ளது. தேர்விற்கு வாராந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வர்களின் நிலை வெளியிடப்படும். காத்திருப்பு தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான நாட்கள் காலியிடங்களுக்கேற்ப இணையவழியாக தெரிவிக்கப்படும். இப்பயிற்சி வகுப்புகள் வரும் 23ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.