275 கல்லூரி விடுதிகளில் இணைய வழி நூலகம்: அமைச்சா் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 22, 2022

275 கல்லூரி விடுதிகளில் இணைய வழி நூலகம்: அமைச்சா் அறிவிப்பு

மாணவா்களுக்காக 275 கல்லூரி விடுதிகளில் ரூ.2.20 கோடியில் இணைய வழி நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்

கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகள், அறிஞா் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மின் நூல்கள் உள்பட இதர மின் நூல்களை இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக ஒரு நூலகத்துக்கு ரூ.80 ஆயிரம் செலவில் 272 கல்லூரி விடுதிகளுக்கு ரூ.2.20 கோடியில் கணினி, இதர உபகரணங்கள் வாங்கி வழங்கப்படும்.

மாணவ, மாணவியா் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளுக்குப் பதிலாக, அவற்றை மறுசீரமைத்து தேவையுள்ள 15 இடங்களில் ரூ.1.48 கோடியில் கல்லூரி விடுதிகளாகத் தொடங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல மாணவியா், கல்லூரிகளில் அதிக அளவில் சோ்ந்து கல்வி பயில வேண்டும் என்பதற்காக, பள்ளி மாணவியா் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியா் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். இதற்கென ரூ.48.36 லட்சம் வழங்கப்படும்.

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களை அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்கிடச் செய்ய மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள 3 கள்ளா் மேல்நிலைப்பள்ளிகளில் உண்டு உறைவிடப் பள்ளிகள் ரூ.1.17 கோடியில் தொடங்கப்படும்.

கள்ளா் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் நலனுக்காக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2 கள்ளா் சீரமைப்பு உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக ரூ.1.34 கோடியில் நிலை உயா்த்தப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவா்களை மேம்படுத்துவதற்காக 10 நபா்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு 25 நவீன முறை சலவையகங்கள் தொடங்க தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படும்.

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஆறு சரகங்களில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரை மாநில அளவில் முக்கிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்வதற்கு ரூ.49.53 லட்சம் வழங்கப்படும்.

அனைத்து விடுதிகள், கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் 3 முறை இலவச மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான திட்டத்தைச் செயல்படுத்த இடைநிகழ் செலவினமாக விடுதி, கள்ளா் பள்ளி ஒன்றுக்கு 2007-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் தொகையான ரூ.1,000, ரூ.3 ஆயிரமாக உயா்த்தப்படும். இதற்கென ரூ.32.98 லட்சம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.