விரைவில் சித்த மருத்துவ பல்கலை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 21, 2022

விரைவில் சித்த மருத்துவ பல்கலை!

''எந்தெந்த மாவட்டங்களில், செவிலியர் பயிற்சி பள்ளிகள் இல்லையோ, அங்கெல்லாம் அமைப்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - செந்தில் நாதன்:

சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில், பி.எஸ்சி., செவிலியர் படிப்பை துவக்க வேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லுாரிக்கு, கூடுதலாக 'சி.டி.ஸ்கேன்' கருவி வேண்டும். முதல் முறை 'டயாலிசிஸ்' செய்ய, மதுரை அரசு மருத்துவமனை செல்ல வேண்டி உள்ளது. அந்த சிகிச்சையை சிவகங்கை மருத்துவமனையில் அளிக்க, டாக்டர்கள் நியமிக்க வேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில், புதிய மருத்துவ படிப்புகளை துவக்க வேண்டும்.

அமைச்சர் சுப்பிரமணியன்:

மதுரை, ராமநாதபுரம், தேனி, பெரியகுளம் ஆகிய இடங்களில், செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதை சிவகங்கை மாவட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லுாரிக்கு, பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு அதி நவீன வசதிகளுடன் கூடிய கருவிகள் இருக்கின்றன. கூடுதல் கருவிகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்:

கருணாநிதி ஆட்சியில், சென்னை, பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லுாரியில், இந்திய மருத்துவ முறையில் செவிலியர் பயிற்சி பெற்றவர்களை, பணி நியமனம் செய்ய அரசு முன்வருமா?அமைச்சர் சுப்பிரமணியன்: சித்த மருத்துவப் பல்கலை, தமிழகத்தில் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சித்த மருத்துவப் பல்கலை வரும்போது, அவர்கள் பணி அமர்த்தப்படுவர்.

தி.மு.க.,- கலைவாணன்:

தி.மு.க., ஆட்சியில், திருவாரூர் மாவட்டத்தில், செவிலியர் கல்லுாரி அமைக்க, அரசாணை வெளியிடப்பட்டது. பத்து ஆண்டுகளாக, கல்லுாரி துவக்கப்படவில்லை.

அமைச்சர் சுப்பிரமணியன்: தமிழகத்தில் ஏற்கனவே ஐந்து செவிலியர் கல்லுாரிகள், 21 செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. எந்தெந்த மாவட்டங்களில், செவிலியர் பயிற்சி பள்ளிகள் இல்லையோ, அங்கெல்லாம் அமைக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.