ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 18, 2022

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின் படிதான் இனிமேல் தேர்வுகள் நடக்கும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. ஒன்றிய அரசு கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய இலவச கல்வித்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களில் மேற்கண்ட தகுதித் தேர்வும் கட்டாயம் என்று தெரிவித்ததால் தமிழக அரசும் ஆசிரியர் தகுதித்தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டாம் தாள் என இரண்டு கட்டமாக தேர்வுகளை நடத்தி வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வுகளை பொருத்தவரையில் உளவியல், மொழிப்பாடம், ஆங்கிலம் மற்றும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் உளவியல், மொழிப்பாடம் மற்றும் எந்த பாட ஆசிரியராக விரும்புகிறார்களோ அந்த பாடங்களில் தேர்வு எழுத வேண்டும். இரண்டு தேர்வுகளுக்கும் தலா 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வு நடப்பதை அடுத்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான பாடங்கள் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் உள்ள பாடங்களில் இருந்து கேட்கப்பட்டாலும் பிளஸ் 2 வகுப்புகளில் இருந்தும் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 75 பக்கங்கள் கொண்ட புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1 முதல் 3ம் பக்கம் வரையில் உள்ள குழந்தை மேம்பாடு மற்றும் உளவியல் பகுதி கட்டாயமாக வைக்கப்படுகிறது. அதில் 30 கொள்குறி வினாக்கள் கேட்கப்படும், தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடா, உருது மொழிகளில் பாக்கம் 4, 5 பக்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து 30 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலத்துக்கு 6 முதல் 27ம் பக்கம் வரையில் உள்ள பகுதியில் இருந்து 30 கேள்விகள் இடம் பெறும். கணக்கு, அறிவியல் ஆசிரியர்களுக்கு 28ம் பக்கம் முதல் 48 பக்கம் வரையுள்ள பகுதிகளில் இருந்தும், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு 49ம் பக்கம் முதல் 74ம் பக்கம் வரையும் உள்ள பகுதிகளில் இருந்து 60 கேள்விகள் கேட்கப்படும். இதர பகுதிகளில் இருந்து மற்ற பாடங்களுக்கான கேள்விகள் இடம் பெறும். மொத்தம் 150 மதிப்பெண்கள் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட புதிய பாடத்திட்டம் தொடர்பான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதித் தேர்வு எழுத உள்ள ஆசிரியர்கள் இந்த புதிய பாடத்திட்டத்தின் படி தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.