மத உணர்வை புண்படுத்தியதாக மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள் மீது புகார்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 20, 2022

மத உணர்வை புண்படுத்தியதாக மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள் மீது புகார்!

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவியின் தந்தை சங்கர் என்பவர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "அவிநாசி அருகே ராக்கிபாளையத்தில் வசித்து வருகிறோம். இப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். மகள் பள்ளிக்கு செல்லும்போது தினமும் நெற்றியில் திருநீறு பட்டையும், ருத்ராட்சையும் அணிந்து செல்வாள். மகளின் தமிழாசிரியை திலகவதி, ‘பட்டை போட்டு வருகிறாய். படிக்கத் தெரியாதா?’ என கேள்வி எழுப்புகிறார். மேலும், வகுப்பு தொடங்கும் முன்பு இயேசுநாதரை வழிபடும்படி கூறியுள்ளார்.

நெற்றியில் திருநீறு பட்டை அணிந்தது தொடர்பாக ஆங்கில ஆசிரியை கல்பனாவும் திட்டியுள்ளார். எங்களின் மத உணர்வை புண்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகளை விசாரிக்க போலீஸார் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக மாணவிகள் 45 பேரிடம் பள்ளி தலைமையாசிரியர் விசாரித்தார். அவரைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் நேற்று மாலை வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

பள்ளி தரப்பில் கூறும்போது, ‘‘மாதிரித் தேர்வில் மாணவி போதிய மதிப்பெண்கள் எடுக்காத நிலையில், இரண்டு ஆசிரியர்களும் திட்டியுள்ளனர். இருவரும் கிறிஸ்தவர்கள் என்பதால், பள்ளி மாணவிகளிடம் முதல்கட்டமாக விசாரித்தோம்’’ என்றனர்.

மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் கூறும்போது, "பள்ளியில் ஆசிரியைகள் நடந்துகொண்டது தொடர்பாக விசாரித்து வருகிறோம். விசாரணை இன்னும் முழுமை அடையவில்லை" என்றார்.

2 comments:

  1. ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நான் 1989 ம் ஆண்டுமுதல் 2010 ம் ஆண்டு வரை பொருளாளர், செயலாளர், தலைவர் என இருந்துள்ளேன். மேலும் இன்றுவரை பள்ளியின் நலனில் அக்கறையும் செலுத்திவருகிறேன். இப்பள்ளியில், தங்கள் செய்தியில் வந்துள்ளது போன்ற மத மாற்றம் என்ற செய்தி இட்டுக்கட்டிய தவறான தகவல். மாணவி பாடங்கள் , வீட்டுப்பாடங்கள் படிக்காததன் காரணமாக ,பட்டை மட்டும் போடத்தெரிகிறது, வீட்டுப்பாடம் எழுத தெரியவில்லையா? என கேட்டுள்ளார். இப்படி பட்டை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியது தவறானது! மாணவர்களை திட்டக்கூடாது,அடிக்க கூடாது ,இப்படி கருத்துக்கூட சொல்லக்கூடாது என்றால் மாணவர்களை எப்படித்தான் படிக்க வைப்பது?

    ReplyDelete
  2. மாணவர்களை எந்த விதத்திலும் கேள்வியே கேட்கக் கூடாது...ஆனால் பாடப் பொருள் முழுமையாக அவர்களைச் சென்றடைய வேண்டும்..ஆசிரியரின் இன்றைய நிலை இதுவேதான்..இது மாற்றம் பெறும் மந்திரம்தான் என்ன???? யாராவது பாதாளம் நோக்கி பயணப் பட்டுக் கொண்டிருக்கும் நம் பண்பாட்டு பாரம்பரியத்தை கல்வி ஒழுக்கத்தை மீட்டெடுக்க வழி கூறுங்களேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.