தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் சீரமைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 20, 2022

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் சீரமைப்பு

ஆந்திர மாநிலத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் சீரமைக்கப்படுகிறது என்று சித்தூரில் இலவச சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த எம்பி ரெட்டியப்பா பெருமிதத்துடன் கூறினார்.சித்தூரில் நேற்று, அரசு மருத்துவமனையில் ஆயுஷ்மான் பாரத் இலவச சிகிச்சை மையத்தை எம்.பி. ரெட்டியப்பா ரிப்பன் கட் செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 4 ஆண்டுகள் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நிறைவடைந்ததை ஒட்டி சித்தூர் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை மையத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உடல் முழுவதும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் மூன்று திட்டங்களை முன்வைத்து அதை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். ஒன்று கல்வி. 2 சுகாதாரம். 3 வேலைவாய்ப்பு. இந்த 3 திட்டங்களை ஜெகன்மோகன், வெற்றிகரமாக நடத்தி வருகிறார். நாடு நேடு திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை சீரமைத்து அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

இரண்டாவது சுகாதாரம். இந்தியாவிலேயே சுகாதாரத்தில் ஆந்திர மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஏழை, எளிய மக்கள் தங்களின் நோய்களை குணப்படுத்திக் கொள்ள பல லட்சம் ரூபாய் தனியார் மருத்துவமனைகளுக்கு செலவு செய்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு முதல்வர் ஜெகன்மோகன், சுகாதார காப்பீடு திட்டத்தின்கீழ் ஐந்து லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்துகொள்ள உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை செய்து கொள்ள வசதியை ஏற்படுத்தித் தந்தார். அதேபோல் ஆந்திர மாநிலம் முழுவதும் தாய்-சேய் நல திட்டத்தின்கீழ் 5 ஆயிரத்து 730 வாகனங்களை அந்தந்த அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளார். இந்த வாகனத்தில் குழந்தை பிறந்த உடன் தாய் மற்றும் குழந்தையை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவர்களின் வீட்டு வரை இலவசமாக சென்று விட்டு வரப்படுகிறது.

அதேபோல் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செய்து வருகிறார். தற்போது படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுபோன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் ஜில்லா பரிஷத் சேர்மன் வாசு, மாநகராட்சி மேயர் அமுதா, மாநகராட்சி துணை மேயர் ராஜேஷ் குமார், சித்தூர் மாவட்ட சுகாதாரத்துறை பொறுப்பு அதிகாரி பென்சிலையா, சித்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ராஜசேகர் உள்பட ஏராளமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.