அனைத்துத் துறைகளுக்கும் நிறுத்தப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வை, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை வழிகாட்டுதல் (G.O.457/1968) மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் சட்ட விதிகளின்படி ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்கிட உரிய கொள்கை முடிவு எடுக்க வேண்டுதல் - சார்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 4, 2026

அனைத்துத் துறைகளுக்கும் நிறுத்தப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வை, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை வழிகாட்டுதல் (G.O.457/1968) மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் சட்ட விதிகளின்படி ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்கிட உரிய கொள்கை முடிவு எடுக்க வேண்டுதல் - சார்பு.

பெறுநர்:

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை சென்னை 600009.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்:

நிதித்துறை அரசாணை எண்: 116/2020- இனால் அனைத்துத் துறைகளுக்கும் நிறுத்தப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வை, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை வழிகாட்டுதல் (G.O.457/1968) மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் சட்ட விதிகளின்படி ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்கிட உரிய கொள்கை முடிவு எடுக்க வேண்டுதல் - சார்பு.

வணக்கம்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு,

தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் கல்வித் தகுதியை வளர்த்துக் கொள்ளவும், அதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உலகளாவிய நிலைக்கு உயர்த்தவும் ஏதுவாக, கடந்த காலங்களில் உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு"ஊக்க ஊதிய உயர்வு" (Advance Increments for Higher Qualification) தடையின்றி வழங்கப்பட்டு வந்தது.நிதித்துறையின் அரசாணை எண்: 116 (நாள்:06-05-2020)-இன் படி, இந்த ஊக்க ஊதிய உயர்வு நடைமுறை ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரசுத் துறைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக அரசாணை எண்: 37 (நாள்: 10-03-2021)-இன் கீழ் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் திரள் தொகை (Lumpsum Incentive) அறிமுகப்படுத்தப்பட்டது.

இம்மாற்றத்தால், ஆசிரியர்களின் வாழ்நாள் உழைப்பிற்கான பொருளாதார அங்கீகாரம் மறுக்கப்பட்டு, பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் உள்ள சட்ட நுணுக்கங்களையும் நிர்வாகத் தரவுகளையும் தங்களின் நிதி மேலாண்மைப் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

1. பேரறிஞர் அண்ணாவின் அரசாணை 457-இன் அடிப்படை நோக்கம்:

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் தகுதியைத் தொடர்ந்து உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 1968-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிதித்துறை அரசாணை எண்: 457, நாள்: 11-04-1968 வெளியிடப்பட்டது. சுய கற்றலை ஊக்குவிக்கும் இந்த வரலாற்றுச் முற்றிலும் ரத்து செய்வது, முடிவை சிறப்புமிக்க கல்வித்துறையின் நீண்டகாலத் வளர்ச்சிக்கு நிர்வாக ரீதியாக உகந்தது அல்ல. கொள்கை 2. அனைத்துத் துறைகளுக்கும் நிறுத்தப்பட்ட விவரம் மற்றும் நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்ட முன்மாதிரி:

அரசாணை எண் 116-இன் படி, ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் இத்திட்டம் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டது என்பது உண்மையே. எனினும், இவ்வரசாணை வெளியாவதற்கு முன்பே உயர்கல்வி பயில முறைப்படி துறை அனுமதி (Course Permission) பெற்று, அரசாணைக்கு பின் படிப்பை முடித்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை (PWD) உள்ளிட்ட பிற துறை சார்ந்த பணியாளர்களுக்கு, மாண்புமிகு உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் (W.P. No. 3137 of 2021 etc.) அரசாணை 116-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பழைய நடைமுறைப்படியே ஊக்க ஊதிய உயர்வு நிலுவைகளுடன் வழங்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3. மாண்புமிகு உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் சட்டப் பாதுகாப்பு (Vested Rights):

மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகளின்படி, அரசாணை எண்: 116 (நாள்: 06-05-2020) வெளியாவதற்கு முன்பே உயர்கல்வி பயில அனுமதி பெற்ற ஆசிரியர்களின் உரிமை என்பது சட்டப்படி "நிலைபெற்ற ஒன்றாக" (Vested Right) கருதப்பட வேண்டும். எனவே, பிற துறைகளில் நீதிமன்ற உத்தரவுகளின்படி நடைமுறைப்படுத்தப்பட்டது போல, கல்வித்துறையிலும் அரசாணைக்கு முன் படிப்பைத் தொடங்கிய ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய உயர்வை மறுப்பது இயற்கை நீதிக்கு முரணானதாகும்.

4. அரசாணை 37-இன் நிதி முரண்பாடுகள்:

தற்போது நடைமுறையில் உள்ள அரசாணை எண்: 37-இன் கீழ் வழங்கப்படும் ஒருமுறை திரள் தொகையானது, ஆசிரியர்கள் உயர்கல்விக்காக (முதுகலை, முனைவர் பட்டம்) செலவிடும் பல ஆண்டு உழைப்பிற்கும் காலத்திற்கும் ஈடான பலனைத் தருவதில்லை. ஊதிய உயர்வுடன் கூடிய தொடர் ஊக்கத்தொகை மட்டுமே ஆசிரியர்களைத் தொடர் கற்றலில் ஈடுபட வைக்கும் உண்மையான காரணியாக அமையும். கொள்கை முடிவு எடுக்க வேண்டுதல்:

அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் பொருளாதார நலனைக் காக்கவும் மாண்புமிகு தமிழக அரசு கடமைப்பட்டுள்ளது.பிற தொழில்நுட்பத் துறைகளைக் காட்டிலும், கல்வித்துறையில் ஆசிரியர்களின் அறிவு மேம்பாடு என்பது நேரடியாக லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர்புடையது என்பதால், இதனை ஒரு "சிறப்பு நேர்வாக" (Special Case) அணுக வேண்டிய சட்டபூர்வத் தேவை உள்ளது.

எனவே, கல்வித்துறையின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும், பிற துறைகளில் நீதிமன்ற உத்தரவுகளின்படி வழங்கப்பட்ட முன்மாதிரிகளைக் கருத்தில் கொண்டும், பேரறிஞர் அண்ணா அவர்களால் கொண்டுவரப்பட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட "உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு" (Incentive Increments) திட்டத்தை, தகுந்த சட்டத் திருத்தங்களுடன் கல்வித்துறைக்கு மட்டும் மீண்டும் வழங்கிட மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் உரிய கொள்கை முடிவு எடுத்து, நல்லதொரு அரசாணையை வெளியிட வேண்டுமாய் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.