அரசு பள்ளிகளில் 50ஆயிரம் காலியிடங்கள் - TET தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 30, 2026

அரசு பள்ளிகளில் 50ஆயிரம் காலியிடங்கள் - TET தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை



அரசு பள்ளிகளில் 50ஆயிரம் காலியிடங்கள் - TET தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை 50,000 Vacancies in Government Schools — Demand to Appoint TET Qualifiers as Teachers

இடைநிலை ஆசிரியருக்கான தகுதித்தேர்வில் வெற்றி பெற்று 21,515 பேரும், பட்டாதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் பேரும் வெற்றி பெற்று ஆசிரியர் பணி கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் காலியிடங்கள் அதிகம் உள்ள நிலையில், தகுதித் தேர்வில் வென்றவர்களை இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறும்போது, ’’தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் பெரும்பான்மையான வகுப்புகளுக்கும், பாடங்களுக்கும் ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை ஆகும். கடந்த ஐந்தாண்டுகளில் அரசு பள்ளிகளுக்கு போதிய ஆசிரியர்களை உரிய காலத்தில் நியமிக்காமல் திமுக அரசு இழைத்த சமூக அநீதி தான் இந்த பின்னடைவுக்குக் காரணம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானத் தேவை கல்விதான் என்றாலும், அத்துறைக்கு பத்தாண்டுகளாக உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2013&14ஆம் ஆண்டில்தான் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டனர். அதன்பின் பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளுக்கு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டப் பேரவையிலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுத்திட்ட அறிக்கையிலும் அறிவிக்கப்பட்டாலும் கூட நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை.

போட்டித் தேர்விலும் வெற்றி

இன்னொருபுறம் 2018ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149இன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மட்டும் போதாது; அவர்கள் போட்டித்தேர்விலும் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இது ஏற்கனவே பெரும் கவலையிலும், மன உளைச்சலிலும் இருந்தவர்களுக்கு மேலும் அச்சத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியது.

திமுக ஆட்சியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாளும், 2768 இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதியும் வெளியிடப்பட்டன. அடுத்த சில மாதங்களில் இதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டிலேயே அனைத்து நியமனங்களையும் செய்திருக்கலாம்.

ஆனால், தேவையின்றி தாமதம் செய்த திமுக அரசு, ஆட்சிக்காலம் முடியும் தருவாயில்தான் கடந்த பிப்ரவரி மாதத்தின் பணி நியமன ஆணைகளை வழங்கியது. குறித்த காலத்தில் நியமன ஆணைகள் வழங்கப் பட்டிருந்தால், கடந்த ஆண்டில் மீண்டும் ஒருமுறை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்திருக்க முடியும். ஆனால், திட்டமிட்டே அதை செய்யாமல் திமுக அரசு இளைய தலைமுறைக்கு துரோகம் செய்தது. 50 ஆயிரம் + காலி இடங்கள்

அதனால், இன்றைய நிலையில், அரசு பள்ளிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றை கடந்த ஆட்சியில் நிரப்பியிருக்க வேண்டிய திமுக அரசு. அவ்வாறு செய்யாமல் ஏமாற்றி விட்டது. அதன் விளைவுதான் அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே 50 ஆயிரத்திற்கும் கூடுதலாக காலியாக உள்ளன. அந்த இடங்களில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து தமிழக அரசு நிலைமையை சமாளித்து வருகிறது. இதனால் அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை.

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில், குறிப்பாக வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வித் தரம் எந்த அளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இந்த மாதம் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்தான் சான்று ஆகும். இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டிருப்பது மட்டுமின்றி, வட மாவட்டங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். அது வாக்குறுதியாக மட்டுமே இல்லாமல் செயல்வடிவம் பெற வேண்டும்.

அதுதான் அரசு பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தும்.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், இடைநிலை ஆசிரியருக்கான தகுதித்தேர்வில் வெற்றி பெற்று 21,515 பேரும், பட்டாதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் பேரும் வெற்றி பெற்று ஆசிரியர் பணி கிடைக்காமல் காத்திருக்கின்றனர். தமிழக அரசு நினைத்தால், அந்த அரசுக்கு சமூகநீதியில் அக்கறையிருந்தால், கடந்த 2018ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்து விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நேரடியாக நியமிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.